பதவி நீக்கத் தீர்மானம்: டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்த தமிழர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வாக்களித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வாக்களித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்கக் கோரும் தீர்மானங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் நேற்று (புதன்கிழமை) இரவு நிறைவேற்றப்பட்டன. டிரம்ப்புக்கு எதிராக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் அரசியல் போட்டியாளரான ஜோ பிடனை பழிவாங்க உக்ரைனுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
டிரம்ப்புக்கு எதிரான இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தபடியாக செனட் அவைக்கு அனுப்பப்படவுள்ளது. செனட் அவையில் டிரம்ப்பைத் தகுதி நீக்கம் செய்ய இந்தத் தீர்மானத்துக்கு 67 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு செனட் அவையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, இந்தப் பதவி நீக்கத் தீர்மானங்கள் செனட் அவையில் தோல்வியில் முடியும் என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 4 அமெரிக்க இந்தியர்கள் டிரம்ப்புக்கு எதிரான இந்தப் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தப் பிறகு டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரமிளா ஜெயபால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே டிரம்ப்பின் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகையில், "அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக உறுதி மொழி ஏற்றுள்ளேன். அதைத்தான் நான் இன்று இரவு செய்தேன்" என்றார்.
இவர்களைத் தவிர ரோ கண்ணா, அமி பேரா ஆகிய இரண்டு இந்தியர்களும் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு காலிஃபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் அவைக்குத் தேர்வானவர்கள் ஆவர்.
இதில், ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.