உலகம்

சவூதி விமான நிலையத்தில் யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

DIN


சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் யேமன் கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இந்தியர் உள்பட 21 பேர் காயமடைந்ததாகவும் சவூதி கூட்டுப் படையினர் தெரிவித்தனர். 
தனது ஆளில்லா விமானத்தை ஈரான் சூட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதன் நட்பு நாடான சவூதி மீது ஈரான் ஆதரவு பெற்ற யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இதுதொடர்பாக சவூதி கூட்டுப் படையினர் கூறியதாவது: 
சவூதியின் தெற்குப் பகுதியில் உள்ள அபா விமான நிலையத்தில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சிப் படை நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி கொல்லப்பட்டார். சவூதி அரேபியா, எகிப்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவர். 
இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 18 வாகனங்கள் சேதமடைந்ததுடன், வர்த்தகக் கட்டடம் ஒன்றின் கண்ணாடிகள் நொறுங்கின என்று கூட்டுப் படையினர் கூறினர். 
விமான நிலையத்தில் எந்த மாதிரியிலான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்த தகவலை கூட்டுப் படையினர் வெளியிடவில்லை. எனினும், ஹூதி கிளர்ச்சிப் படையினர் இதே விமான நிலையத்தை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் முன்பு தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், விமானப் போக்குவரத்து சீரடைந்ததாக அபா விமான நிலைய அதிகாரிகள் சுட்டுரையில் பதிவிட்டிருந்தனர். எவ்வளவு நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை. 
இதனிடையே, அபா மற்றும் ஜிஸான் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் அல் மசிரா தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. எனினும், ஜிஸான் விமான நிலையம் தாக்கப்பட்டதாக கூறப்படுவதை சவூதி கூட்டுப் படையினர் உறுதி செய்யவில்லை.  
இதே அபா விமான நிலையத்தில் கடந்த 12-ஆம் தேதி யேமன் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியப் பெண் உள்பட 26 பேர் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT