உலகம்

தகவல் தொழில்நுட்ப அவசர நிலை: டிரம்ப் அறிவிப்பு: தடைப் பட்டியலில் சீனாவின் ஹுவாவே நிறுவனம்

DIN


அமெரிக்க தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான அவசர நிலையை அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தகவல் தொடர்பு சாதனங்களை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்குத் தடை விதிக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், எந்த நாட்டின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
எனினும், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹுவாவேவிடமிருந்து, அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்க வேண்டாம் என்று நட்பு நாடுகளிடம் அமெரிக்க அதிகாரிகள் ஏற்கெனவே வலியுறுத்தி வந்தனர்.
விரைவில் அமலுக்கு வரவிருக்கும் டிரம்ப்பின் இந்த அவசர நிலை உத்தரவின் கீழ், அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பெற வேண்டுமென்றால் ஹுவாவே நிறுவனம் அந்த நாட்டு அரசிடமிருந்து உரிமம் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இந்த அவசர நிலை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்க்கவிருப்பதாக வர்த்தகத் துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.
இதுகுறித்து வர்த்தகத் துறைச் செயலர் வில்புர் ரோஸ் கூறுகையில், நாட்டின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் கீழ், ஆபத்தான நிறுவனங்களுக்கான பட்டியலில் ஹுவாவே நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பதில் நடவடிக்கை எடுப்போம்:  ஹுவாவே நிறுவனத்துக்கு தடை விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது:
ஆபத்தான நிறுவனங்களுக்கான பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து தகவல் அறிந்தோம். எங்களது நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படும்போது, அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி அறிவுறுத்தி வருகிறோம். எங்களது நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அந்த நிறுவனங்களின் நலனைப் பேணும் வகையிலான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT