பெய்ரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் பலி 100 ஆக உயர்வு: செஞ்சிலுவை சங்கம்
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4,000 பேர் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4,000 பேர் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பவப் பகுதியில் நடந்து வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 4000 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 100 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகளும், பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணியும் நடந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமோனியம் நைட்ரேட் வெடித்து, இரண்டாவது அதிர்வு ஏற்பட்டபோது மிகப்பெரிய ஆரஞ்சு நிற ஜுவாளைகள் வானை எட்டின, ஒரு மிகப்பெரிய சூறாவளியைப் போன்ற அதிர்வலை துறைமுகப் பகுதியில் இருந்து அருகில் இருக்கும் நகரங்களுக்கு பரவியது. இதனால், கட்டடங்கள் குலுங்கின.
இந்த அதிர்வலை, 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சுமார் 240 கி.மீ. தொலைவு வரை சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து தரைமட்டமான, எரிந்து சாம்பலான, நொறுங்கிய கட்டடங்களுக்குள் இருந்து ரத்தமும் சதையுமாக பல உடல்களும், காயமடைந்தவர்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
பெய்ரூட் துறைமுகப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் நகரத்தின் பாதி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் ஏராளமானோர் காயமடைந்ததால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த விபத்து குறித்து லெபனான் பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்னையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்று கூறினார்.
இதுகுறித்து நாட்டின் பொது பாதுகாப்பு சேவை தலைவர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் கூறுகையில், பூர்வாங்க தரவுகளுக்கு ஏற்ப, நீண்ட காலமாக துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததாக கூறினார்.