சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் பக்கங்களை நீக்கியது கூகுள்
பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் பக்கங்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் பக்கங்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
உலகம் முழுவதும் சீனாவுடன் தொடர்புடைய செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் மீது பாதுகாப்பு காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் வலைத்தளத்தில் போலி தகவல்களைப் பரப்புவதாகக் கூறி சீனாவுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 2500 பக்கங்கள் நீக்கப்பட்டன.
தேவையற்ற செய்திகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் போலி செய்திகளைக் கொண்டிருந்த காரணத்தால் அவை நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி சமூக வலைத்தளங்கள் போலி செய்திகளைத் தடுப்பதில் கவனமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவை தொடர்ந்து சீனாவின் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். மேலும் டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது அல்லது தடையை எதிர்கொள்வது குறித்து அந்த நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஆதாரமற்ற செய்திகள் குறித்து எழுந்த புகாரால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் பக்கங்களை நீக்கியது குறித்து அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் புதன்கிழமை சீன வெளியுறவு மந்திரி வாங் யி, “அமெரிக்காவின் நோக்கம் தொழில்நுட்பத்தில் ஏகபோக நிலையை பாதுகாப்பதும், மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமையை கொள்ளையடிப்பதும் தான் என்பதை எவரும் தெளிவாகக் காணலாம்" என்று கூறியிருந்தார்.