உடல்நலப் பிரச்னையால் பதவி விலக உள்ளார் ஜப்பான் பிரதமர்
உடல் நலப் பிரச்னை காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்யோ: உடல் நலப் பிரச்னை காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான என்எச்கே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஷின்ஸோ அபே (65) தான் எடுத்திருக்கும் முடிவு குறித்து இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஷின்ஸோ அபேவின் உடல்நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் டோக்யோவில் உள்ள கெய்யோ பல்கலை மருத்துவமனைக்கு இரண்டு முறை வருகை தந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியான நிலையில், இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
ஆகஸ்ட் 17-ம் தேதி அபே முதல் முறையாக மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றதாகக் கூறப்பட்டது. அப்போது சுமார் 7 மணி நேரம் பிரதமர் மருத்துவமனையில் இருந்தார்.
கடந்த திங்கள்கிழமை மீண்டும் அபே மருத்துவமனைக்குச் சென்று மேலும் சில பரிசோதனைகள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
அவர் பதவி விலகல் செய்தி ஒருவேளை உறுதி செய்யப்பட்டால், ஜப்பான் பிரதமராக இருக்கும் போது ஷின்ஸோ அபே உடல் நலக் குறைவால் பதவி விலகுவது இது இரண்டாவது முறையாக இருக்கும்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே, உடல் நலக் குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.