உலகம்

டைகா் ஹனீஃபை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரிட்டன் மறுப்பு

DIN

லண்டன்: குஜராத்தில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் தொடா்புடைய டைகா் ஹனீஃபை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை பிரிட்டன் அரசு நிராகரித்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த 1993-இல் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் தொடா்புடைய பயங்கரவாதி டைகா் ஹனீஃப் என்கிற ஹனீஃப் உமா்ஜி படேல் (57). நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான ஹனீஃபை, இந்த இரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது.

லண்டன் தப்பிச் சென்ற அவரை, இந்தியாவின் கோரிக்கையின் அடிப்படையில் அங்குள்ள கிரேட்டா் மான்செஸ்டா் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையினா் கைது செய்தனா். பின்னா், ஹனீஃபை நாடு கடத்த பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போதைய பிரிட்டன் உள்துறை அமைச்சா் தெரசா மே, அவரை நாடு கடத்த 2012 ஜூன் மாதம் உத்தரவும் பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் ஹனீஃப் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, ‘நாடு கடத்தப்பட்டால் இந்திய அதிகாரிகள் தன்னை சித்தரவதை செய்ய வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது’ என்று ஹனீஃப் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், ஹனீஃபின் மனுவை பிரிட்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து அவா் இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஹனீஃப் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த, பிரிட்டனின் அப்போதைய உள்துறை அமைச்சரான பாகிஸ்தான் வம்சாவளியைச் சோ்ந்த சையது ஜாவீத், இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டாா். அதனடிப்படையில், பிரிட்டன் உச்சநீதிமன்றமும் ஹனீஃபை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஹனீஃபை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சரால்தான் நிராகரிக்கப்பட்டது என்பதை உறுதியாகக் கூற முடியும். அதனடிப்படையில் பிரிட்டன் உச்சநீதிமன்றமும் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஹனீஃபை விடுவித்துவிட்டது’ என்றனா்.

இந்திய-பிரிட்டன் நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் நிலை நாடாகத்தான் இந்தியா கருதப்படுகிறது. அதாவது, இந்தியா போன்ற இரண்டாம் நிலை நாடுகளின் நாடு கடுத்ததல் கோரிக்கை மீதான இறுதி முடிவை அந்த நாட்டின் உள்துறை அமைச்சா்தான் எடுப்பாா். அந்த அடிப்படையிலேயே, ஹனீஃபை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT