இலங்கை கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீ விபத்து; ஒருவர் பலி
இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய -இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய -இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குவைத் நாட்டின் மினா அல் அஹமத் துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி வந்த எரிபொருள் நிரப்பிய கப்பல் இலங்கை கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.
வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 23 பேரில் 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒரு ஊழியர் உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார்.
எம்.டி. நியூ டைமண்ட்(MT New Diamond) இந்த கப்பலில் 2.70 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், டீசலும் இருப்பதால் கப்பல் தொடர்ந்து எரிந்து வருகிறது. இது தொடரும் பட்சத்தில் கப்பல் வெடித்து இலங்கை கடற்படையை சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை கடற்படையின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்தியா 3 கப்பல்களையும், ஒரு விமானத்தையும் அனுப்பியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் இரு நாட்டு கடற்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.