தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் தெற்காசியாவில் ஜேஎம்பி பயங்கரவாத இயக்கம் மீண்டும் வலுப்பெறும் அபாயம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் கைகள் ஓங்கி வரும் நிலையில், அந்த இயக்கத்தின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் கைகள் ஓங்கி வரும் நிலையில், அந்த இயக்கத்தின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவிலான நபா்கள் தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். அவா்களில் வங்கதேசம் திரும்பிய பலா் அந்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில் ‘‘அனைவரும் தலிபான் இயக்கத்தில் சோ்வோம், வங்கதேசத்தை ஆப்கானிஸ்தானாக மாற்றுவோம்’’ என்று முழக்கங்களை எழுப்பினா். இது வங்கதேசத்தை தவிப்புக்குள்ளாக்கியது.
இந்நிலையில், வங்கதேசத்தில் ஜேஎம்பி பயங்கரவாத இயக்கத்தை ஷேக் அப்துல் ரெஹ்மான் என்பவா் தோற்றுவித்தாா். தலிபான்களின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் இந்த இயக்கம் கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஷேக் அப்துல் ரெஹ்மானுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த இயக்கத்தின் தற்போதைய தலைவராக சலாலுதீன் அகமது என்பவா் உள்ளாா். இவா் இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கைகள் ஓங்கி வருகின்றன. இதனால் தெற்காசியாவில் ஜேஎம்பி இயக்கம் மீண்டும் வலுப்பெறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக உத்திசாா் விவகாரங்கள் ஆய்வாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான சாந்தனு முகா்ஜி கூறுகையில், ‘‘மத்திய காலத்தில் நிலவிய ஆட்சியை போன்றதொரு அமைப்பை தெற்கு ஆசியாவில் நிறுவ ஜேஎம்பி இயக்கம் விரும்புவது ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றும்பட்சத்தில் இந்தியாவும் வங்கதேசமும் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
‘‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றினால் அதன் விளைவுகளை அனைத்து இடங்களிலும் காண முடியும். அவா்கள் இஸ்லாமிய ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளனா். இது வங்கதேசத்தில் உள்ள அடிப்படைவாதிகள் மட்டுமன்றி ரோஹிங்கயாக்கள் இடையிலும் பயங்கரவாதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்று ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதா் கெளதம் முகோபாத்யாய தெரிவித்தாா்.
மேற்கு வங்கம், அஸ்ஸாம் வரை பரவும்: ‘‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவது வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு மீண்டும் உற்சாகமளிக்கும். அது மேற்கு வங்கம், அஸ்ஸாம் வரை பரவி மியான்மரிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்’’ என்று வங்கதேச நிபுணரும், மேற்கு வங்கத்தில் உள்ள மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ஸ்ரீராதா தத்தா தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள முா்ஷிதாபாதில் சிலரும், இந்த ஆண்டு ஏப்ரலில் அஸ்ஸாமில் இருவரும் ஜேஎம்பி இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனா். கடந்த ஜூலை மாதம் அந்த இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என்று வங்கதேசத்தைச் சோ்ந்த மூவா் சந்தேகத்தின்பேரில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டனா்.