முகப்பு
உலகம்

ஆப்கனிலிருந்து 392 பேர் மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், இரண்டு ஆப்கன் எம்.பி.க்கள் உள்பட 392 பேர் 3 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், இரண்டு ஆப்கன் எம்.பி.க்கள் உள்பட 392 பேர் 3 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
 ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அங்கிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
 அதன் ஒரு பகுதியாக 107 இந்தியர்கள், 23 ஆப்கன் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் உள்பட 168 பேர் காபூலில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் தில்லியை அடுத்த ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
 87 இந்தியர்கள், இரு நேபாள நாட்டினர் ஆகியோர் ஏற்கெனவே காபூலில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
 இதனிடையே, காபூலில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படையின் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கத்தார் தலைநகர் தோஹாவில் தங்கவைக்கப்பட்டிருந்த 135 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
 "தோஹாவில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 146 இந்தியர்கள் மற்றொரு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக' அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 முன்னதாக இந்திய தூதரகப் பணியாளர்கள் உள்ளிட்ட 40 பேர் கடந்த திங்கள்கிழமையும், தூதரகப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், இந்தியர்கள் உள்ளிட்ட 150 பேர் கடந்த செவ்வாய்க்கிழமையும் மீட்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 590-ஆக உயர்ந்துள்ளது.
 போலியோ தடுப்பு மருந்து: இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்படுவோருக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தில்லி விமான நிலையத்தில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் புகைப்படத்தையும் தனது பதிவுடன் அவர் வெளியிட்டிருந்தார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படாமல் உள்ளது.
 இந்தியா எங்கள் இரண்டாவது வீடு: ஆப்கன் எம்.பி.க்கள்
 ஆப்கனிலிருந்து ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ஆப்கன் எம்.பி.க்களான அனார்கலி ஹொனார்யர், நரேந்தர் சிங் கல்ஸா, அவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர்.
 விமானப் படைத் தளத்தில் நரேந்தர் சிங் கல்ஸா செய்தியாளர்களிடம் கூறியது:
 "இந்தியா எங்களது இரண்டாவது வீடு. நாங்கள் ஆப்கானியராக இருந்தபோதிலும் எங்களை ஹிந்துஸ்தானியர்கள் என்றே பலரும் அழைப்பர். இந்தியாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 ஆப்கனைவிட்டு வெளியேறும் முடிவு கடினமானது மட்டுமின்றி வலி நிரம்பியதும்கூட. இதுபோன்ற நிலையை நாங்கள் கண்டதில்லை' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.