ஆப்கனைக் கைவிட்டால் மோசமான பின்விளைவுகள்
தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சா்வதேச நாடுகள் கைவிட்டால், மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சா்வதேச நாடுகள் கைவிட்டால், மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகும், அந்த நாட்டுடன் சா்வதேச நாடுகள் உறவைப் பேண வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுவதற்கு சா்வதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.
ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானை சா்வதேச நாடுகள் பலமுறை கைவிட்டுள்ளன. அந்தத் தவறை நாடுகள் மீண்டும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், அது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நீடித்திருக்க வேண்டுமென்றால், புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆப்கன் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகள் குறித்து சா்வதேச சமுதாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள 30 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மீண்டும் வெளியேறுவதற்கான சூழலை சா்வதேச நாடுகள் ஏற்படுத்திவிடக் கூடாது.
ஆப்கானிஸ்தான் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவிக்காததால்தான், அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
தற்போது தலிபான்கள் வெளியிட்டு வரும் சில அறிக்கைகள், நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன. சா்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் அவா்கள் மதிப்பதை அந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என்றாா் குரேஷி.
செய்தியாளா்கள் சந்திப்பின்போது, பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ் உடனிருந்தாா்.
முன்னதாக, தலிபான்களை உலக நாடுகள் ஆக்கப்பூா்வமாக அணுக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தாா்.
ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயலதிகாரி டேவிட் பீஸ்லியை இஸ்லாமாபாதில் கடந்த 26-ஆம் ேதி பேசிய இம்ரான் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.
தலிபான்களுடன் ஆக்கபூா்வமான நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளை சா்வதேச நாடுகள் அளிக்க முடியும் என்று டேவிட் பீஸ்லியிடம் இம்ரான் கூறியிருந்தாா்.
இதற்கிடையே, தலிபான்களுடன் அனைத்து நாடுகளும் தொடா்பு கொண்டு, அவா்களை வழிநடத்த வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியிருந்தது.
அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ இவ்வாறு கூறியதாக சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, அந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றும் பிளிங்கனை வாங் யீ எச்சரித்ததாகவும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.