குருவாயூரில் 50 ஆண்டுகளாக ஹிந்து எம்எல்ஏ இல்லை! பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
குருவாயூரில் இதுவரை ஹிந்து ஒருவர்கூட எம்எல்ஏவாக இல்லாதது ஏன்? என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித தலங்களில் குருவாயூர் முக்கியத்துவம் வாய்ந்து திகழ்கிறது. அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், ஹிந்துக்கள் அதிகமுள்ள குருவாயூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இதுவரை ஒரு ஹிந்து எம்எல்ஏகூட தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்? என்று அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பி. கோபாலகிருஷ்ணன் பேசி விடியோ வெளியிட்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
Advertisement
Advertisement
அவர் பேசிய அந்த விடியோவில், சுமார் ஐம்பது ஆண்டுகளாக குருவாயூர் தொகுதியிலிருந்து ஒரு ஹிந்து எம்எல்ஏகூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணிகள் இத்தொகுதியில் தங்கள் கூட்டணிகள் சார்பில் ஹிந்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்றும் பேசியிருக்கிறார்.
மேலும் அவர், குருவாயூர் ஒரு சர்வதேச புனித தலம். குருவாயூரப்பனின் நிலம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கோயில் திருடர்களின் கைகளில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேற்கண்ட காணொலி கேரள தேர்தல் களத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து கோபாலகிருஷ்ணன் மீது கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.
இதையடுத்து, வகுப்புவாத பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில், கேரள மாணவர்கள் யூனியன் (கேஎஸ்யூ) காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதுடன் உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அந்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய கோரப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடமும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில தலைமை தேர்தல் நடத்தும் அலுவலர் யூ. ரத்தன் கேல்கர், சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
A controversy has erupted in poll-bound Kerala over an alleged communal remark made by BJP candidate in Guruvayur constituency, B Gopalakrishnan, in his campaign video, with the ruling CPI(M) and opposition Congress approaching the Election Commission seeking action against him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.