முன்னாள் பாதுகாப்பு அலுவலர்களை குறிவைக்கும் நடவடிக்கைகள்; விதி மீறிய தலிபான்கள்
தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கன் ராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் மாயமாகியுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.
ஆட்சி அமைத்த பிறகு, முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி ஆட்சியின்போது பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தலிபான்கள் அறிவித்தனர்.
இருப்பினும், தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கன் ராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் மாயமாகியுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தலிபான்கள் நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கன் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த முன்னாள் வீரர்கள் கொலை செய்யப்படுவது திடீரென மாயமாவது குறித்த தகவல்கள் எங்களைக் கவலையடையச் செய்கிறது.
இவை கடுமையான மனித உரிமை மீறல்கள். மேலும், இந்த நடவடிக்கைகள் தலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானது.
ஆட்சி அமைத்த போது அறிவித்த பொது மன்னிப்பு அறிவிப்பை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதைத் தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், இந்த முறைப் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படும் எனத் தலிபான்கள் அறிவித்திருந்தனர். இருப்பினும், இருபாலர் படிக்கும் கல்வி முறைக்குத் தடை, ஆண் துணையின்றி வேலை செய்யத் தடை எனத் தொடர்ந்து பெண் உரிமைக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தலிபான்கள் விதித்திவருவது குறிப்பிடத்தக்கது.