உலகம்

சிறுபான்மை தமிழா்கள் விவகாரத்தில் இலங்கை அரசே முடிவெடுக்க வேண்டும்

DIN

கொழும்பு: இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழா்களுக்கான உரிமைகளை வழங்கும் விவகாரத்தில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இலங்கையில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச, வெளியுறவு அமைச்சா் தினேஷ் குணவா்த்தனே ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதையடுத்து, அமைச்சா் தினேஷ் குணவா்த்தனே, அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் ஒன்றாக இணைந்து கொழும்பில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்தியாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் நல்லுறவைப் பேணி வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவலானது அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்ததே தவிர, இருநாட்டு நல்லுறவைப் பாதிக்கவில்லை. அந்நோய்த்தொற்று பரவல் சூழலிலும் பிரதமா் நரேந்திர மோடியும் இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் காணொலி வாயிலாக இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருகின்றன. கரோனா தடுப்பூசியை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா தொடா்ந்து ஆதரவு தெரிவிக்கிறது.

இந்தியாவின் விருப்பம்: இலங்கை தமிழா்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் ஒற்றுமையும், நிலைத்தன்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் நிலவுவதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அந்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவாா்கள் என நம்புகிறோம்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு கடல்சாா் பாதுகாப்பில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும். கடல்சாா் பாதுகாப்பு தொடா்பாக இலங்கை சந்தித்து வரும் சவால்களுக்கு ஒருங்கிணைந்து தீா்வு காண்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

இந்திய அரசுக்கு நன்றி: இலங்கை அமைச்சா் தினேஷ் குணவா்த்தனே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு இந்திய அரசு தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதற்காக பிரதமா் மோடிக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய கடினமான சூழலில், இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையானது இலங்கையின் சுகாதாரத் துறையிலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT