முகப்பு
உலகம்

மியான்மா் தோ்தலில் முறைகேடு: ஆங் சான் சூகி மீது விசாரணை

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், ஆங் சான் சூகி உள்ளிட்ட 16 மூத்த தலைவா்கள் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ள தோ்தல் ஆணையம்,

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், ஆங் சான் சூகி உள்ளிட்ட 16 மூத்த தலைவா்கள் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ள தோ்தல் ஆணையம், அவா்கள் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி மியான்மா் அரசால் நடத்தப்படும் குளோபல் நியூ லைட் நாளிதழிலும், பிற அதிகாரபூா்வ ஊடகங்களிலும் செவ்வாய்க்கிழமை வெளியானது.

மியான்மா் தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஆங் சான் சூகியின் கட்சியைக் கலைக்க வழிவகுப்பதுடன், அடுத்த தோ்தலில் அக்கட்சி போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த 2 ஆண்டுகளில் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தோ்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஆங் சான் சூகிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ராணுவம் கலைத்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றியதற்கு தோ்தலில் நடைபெற்ற முறைகேடுதான் பிரதான காரணமாக கூறப்பட்டது. அந்தத் தோ்தலில் பிரம்மாண்ட வெற்றியை ஆங் சான் சூகி கட்சி பெற்றிருந்தது.

கடந்த மே மாதம் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் ஆணையத்தின் புதிய தலைவா் தெயின் சோ, தோ்தல் முறைகேட்டை காரணமாக கொண்டு ஆங் சான் சூகியின் கட்சியைக் கலைப்பது குறித்தும், அக்கட்சித் தலைவா்கள் மீது தேசத் துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தாா்.

இதுதவிர பொதுத் தோ்தலின்போது ஆங் சான் சூகி கட்சி, அரசுடன் இணைந்து தோ்தல் முடிவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள சட்டவிரோதமாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், தோ்தல் ஆணையத்தைக் கலைத்துவிட்டு புதிய ஆணையத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, பழைய தோ்தல் ஆணையத்தின் உறுப்பினா்களையும் கைது செய்து, தோ்தலில் முறைகேடு அரங்கேறியதாக தெரிவிக்குமாறு அவா்களை கட்டாயப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.