பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் நேர்மையாக இருந்துள்ளோம்: மனம் திறந்த அமெரிக்கா
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானுக்கு அப்பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத பிரச்னைகளில் பங்கு உள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான எல்லை பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இருப்பது குறித்த விவகாரத்தில் பிரச்னைகளை தெரிவிப்பதில் அமெரிக்கா நீண்ட காலமாகவே நேர்மையாக இருந்துள்ளது என (அமெரிக்க பாதுகாப்புத்துறை) பென்டகன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லை பகுதிகள் பல காலமாகவே தலிபான்களுக்கும் மற்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடமாக இருந்துவருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் போரிடும் தலிபான்கள் மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் செல்வது வழக்கமான ஒன்று. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாடுகள் கடந்த காலத்தில் தொடர் விமரிசனங்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பென்டகன் ஊடக செயலாளர் ஜான் கிர்பி, "நீண்ட நாள்களாகவே, பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் முற்றிலுமாக நேர்மையாக இருந்துள்ளோம். பாகிஸ்தான் எல்லை பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது.
தற்போதும், அந்த பிரச்னை நிலவிவருகிறது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானுக்கு அப்பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத பிரச்னைகளில் பங்கும் பொறுப்பும் உள்ளது. எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
அதே எல்லை பகுதிகளில் உள்ள பயங்கரவாத குழுக்கள் விடும் அச்சுறுத்தல்களால் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்திருப்பதை நினைவுகூர்வது முக்கியம் என நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் நாட்டுக்கள் ட்ரோன் தாக்குதலை மேற்கொள்வது அமெரிக்காவின் உரிமை. அந்நாட்டை தொடர்ந்து பாதுகாப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என நம்புகிறோம்.
எங்களின் நலனையும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க மக்களையும் அங்குள்ள அமெரிக்க மக்களையும் தொடர்ந்து பாதுகாக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை தொடர்ந்து செய்வோம்" என்றார்.