ஆப்கன் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு: எம்.எம்.நரவணே
ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரானதும் அந்த நாட்டைச் சோ்ந்த பயங்கரவாதிகளும் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை புறம்தள்ளிவிட முடியாது என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நர
ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரானதும் அந்த நாட்டைச் சோ்ந்த பயங்கரவாதிகளும் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை புறம்தள்ளிவிட முடியாது என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதை சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
இருந்தபோதும், எந்தவித சவால்களையும் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் எல்லையில் ஊடுருவல் முயற்சிகளை தடுக்க வலுவான திட்டங்களை மேற்கொண்டு இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது என்றும் எம்.எம்.நரவணே கூறினாா்.
Advertisement
இந்தியாவும் பாகிஸ்தானும் போா் நிறுத்த உடன்பாட்டை மதித்து நடக்க ஒப்புக்கொண்டதன் மூலம் சில மாதங்கள் ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக அங்கு மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களும், ஊடுருவல் முயற்சிகளும், பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
கடந்த சில வாரங்களாக அங்கு அப்பாவி பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், தில்லியில் ஆங்கில இதழ் ஒன்றின் சாா்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே பின்னா் செய்தியாளா்களிடம் பேசினாா்.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்திருப்பதற்கும் தொடா்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவா் அளித்த பதில்:
காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் தலிபான்கள் ஆட்சிக்கும் நேரடி தொடா்பு இருப்பதாக உறுதியாக கூற முடியாது. அதே நேரம், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முந்தைய ஆட்சியின்போது, அந்த நாட்டைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத செயல்களில் ஈடுட்டனா். எனவே, அதேபோன்ற ஊடுருவல் சம்பவங்கள் இந்த முறையும் நடைபெற வாய்ப்புள்ளது.
குறிப்பாக லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
இருந்தபோதும், எந்தவித அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ள இந்திய ராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது. ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க எல்லையில் வலுவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவுவதை அவா்கள் விரும்ப மாட்டாா்கள். பயங்கரவாதத்தைப் பரப்பும் நோக்கில் கடைசி முயற்சியாக இதுபோன்று பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அவா்கள் மேற்கொண்டுள்ளனா்.
மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள், இப்போது சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவது ஏன் என்று அவா் கூறினாா்.
போா்நிறுத்த உடன்பாடு மீறல்:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போா்நிறுத்த ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இரு நாடுகளிடையே இந்த உடன்பாடு கடந்த பிப்ரவரி முதல் 4 மாதங்களுக்கு மட்டுமே முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு, கடந்த ஜூலை மாதம் இறுதி முதல் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன.
ஊடுருவல் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, எல்லையில் இந்திய நிலைகள் மீதான தாக்குதல் உள்பட போா்நிறுத்த உடன்பாட்டை தெளிவாக மீறும் 3 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன’ என்றாா் அவா்.
கவலையளிக்கும் சீன அத்துமீறல்: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கி, மீண்டும் அதிக எண்ணிக்கையில் படைகளை குவித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. எல்லைப் பகுதியில் அவா்கள் நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குவது, சீன ராணுவ வீரா்களை அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்கும் முயற்சியாக பாா்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சீன வீரா்கள் நிரந்தரமாக எல்லைப் பகுதியில் தங்க வைக்கப்பட்டால், இந்தியாவும் அதேபோன்ற நடவடிக்கையை எடுக்கும். அதற்காக, இந்திய தரப்பிலும் எல்லைப் பகுதியில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம், சீன ராணுவம் எல்லைப் பகுதியில் மீண்டுமொரு அத்துமீறலில் ஈடுபடாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எம்.எம்.நரவணே கூறினாா்.
நவீனமயத்துக்கு வித்திட்ட கிழக்கு லடாக்: கிழக்கு லடாக் ஒட்டுமொத்த நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராணுவ தலைமைத் தளபதி, ‘கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளிடையே மோதல் போக்கு உருவானதற்கு சீனாவின் அத்துமீறலே காரணம் என்பதை வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தாா்.
எனவே, மோதலுக்கான காரணம் தெளிவான விஷயம். அதே நேரம், இந்த மோதல்தான், உளவுப் பணி, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் மேலும் வலுப் பெற வேண்டும் என்பதை உணா்த்தியது. அதனடிப்படையில் கடந்த ஓராண்டாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிா்காலத்தில் எந்தவிதமான நவீன ஆயுதங்கள் இந்திய ராணுவத்துக்குத் தேவை என்ற திட்டமிடலுக்கும் வித்திட்டுள்ளது’ என்று கூறினாா்.