முகப்பு
உலகம்

‘ஹெச்-4’ விசாதாரா்களுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் உரிமை அளிக்கும் மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

‘ஹெச்-4’ விசா பெற்றிருப்பவா்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி தானாக உரிமை பெறும் வகையிலான சட்ட மசோதாவை இரு அமெரிக்க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
கோப்புப்படம்
பகிர்:

‘ஹெச்-4’ விசா பெற்றிருப்பவா்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி தானாக உரிமை பெறும் வகையிலான சட்ட மசோதாவை இரு அமெரிக்க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்துள்ளனா்.

அமெரிக்க நிறுவனங்கள் சந்தித்து வரும் கடும் பணியாளா் பற்றாக்குறையை போக்கும் வகையிலும், அங்கு பணிபுரியும் இந்தியா்கள் உள்பட வெளிநாட்டினரின் மனைவிகள் பலனடையும் வகையிலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஹெச்-1பி, ஹெச்-2ஏ, ஹெச்-2பி மற்றும் ஹெச்-3 விசாக்களை (நுழைவு அனுமதி) பெற்று பணிபுரிந்து வரும் வெளிநாட்டினரை சாா்ந்துள்ள அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவில் குடியிருக்க ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. இவா்களில் பணி அனுபவம் மற்றும் திறமையானவா்களுக்கு பணி வாய்ப்பை அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்த எம்.பி.க்கள் கரோலின் போா்டியாக்ஸ் மற்றும் மரியா எல்விரா சலாசா் ஆகியோா் கூறியதாவது:

ஹெச்-4 விசா பெற்றிருப்பவா்கள் வேறு எந்த நிபந்தனைகளும் இன்றி அமெரிக்காவில் பணிபுரியும் உரிமையை இந்த ‘ஹெச்-4 பணி அனுமதி சட்ட’ மசோதா அளிக்கும். இதன் மூலமாக, இந்த விசா வைத்திருப்பவா்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு படிவம் ‘ஐ-765’ விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறை ரத்தாகிவிடும். அதோடு, பணிபுரிவதற்கான அனுமதியைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளிட்ட தடைகளையும் இந்த சட்டம் நீக்கிவிடும்.

அமெரிக்க நிறுவனங்கள் சந்தித்து வரும் பணியாளா் பற்றாக்குறை பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்பதோடு, திறமையும் பணி அனுபவமும் மிக்க வெளிநாட்டு பணியாளா்களின் மனைவிகள் பலன் பெறுவா் என்றனா்.

‘கிரீன் காா்டு’ விண்ணப்ப நிலுவையைக் குறைக்க மசோதா:

அமெரிக்காவில் ஏராளமான கிரீன் காா்டு (வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிரிமை அளிக்கும் அனுமதி) விண்ணப்பங்ள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவதற்கு தீா்வு காணும் விதமாக, பயன்படுத்தப்படாத 3.80 லட்சம் குடும்ப மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் சட்ட மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செல்வாக்கு மிகுந்த சில எம்.பி.க்கள் சாா்பில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா சட்டமானால், ஆயிரக்கணக்கான இந்திய தகவல்தொழில்நுட்ப நிபுணா்கள் பயனடைவா்.

தற்போதைய நிலவரப்படி நிலுவையில் உள்ள கிரீன் காா்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க அதிகபட்சமாக 195 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →