லுஹான்ஸ்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்!
தங்களது கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்க் மீது தாக்குதல் நடத்த ரஷிய பெரும்படையை திரட்டியுள்ளதால் அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற வேண்டும்
தங்களது கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்க் மீது தாக்குதல் நடத்த ரஷிய பெரும்படையை திரட்டியுள்ளதால் அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹி காய்டாய் கூறியதாவது:
நாட்டின் வடக்குப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கினாலும், கிழக்கே அமைந்துள்ள லுஹான்ஸ்கில் தாக்குதலை தீவிரப்படுத்துவாா்கள் என்று நாங்கள் தொடா்ந்து எச்சரித்து வந்தோம்.
Advertisement
எனவே, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.
எனினும், இன்னும் 30 சதவீத பொதுமக்கள் லுஹான்ஸ் பகுதி நகரங்களிலும் கிராமங்களிலும் தொடா்ந்து வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதற்காக ரஷியா மிகப் பெரிய படையைக் குவித்து வருகிறது. மேலும், தனது ராக்கெட் குண்டுத் தாக்குதலின் தீவிரத்தையும் ரஷியா அதிகரித்து வருகிறது.
எனவே, லுஹான்ஸ்க் பகுதியைவிட்டு பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றாா் அவா்.
இதற்கிடையே, தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் மற்றும் மரியுபோல், மிகோலாய்வ் நகரங்கள் மீது ரஷியப் படையினா் கவனத்தைக் குவித்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
பீரங்கி குண்டு தாக்குதல்கள் மட்டுமன்றி, கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரஷியப் போா்க் கப்பல்களிலிருந்து குரூஸ் வகை ஏவுகணைகளைச் செலுத்தியும் இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி வந்தாலும், தரைவழியாக ரஷிய ஆக்கிரமிப்பு கிரீமியா தீபகற்பத்துக்கும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையிலான பகுதிகளைக் கைப்பற்ற ரஷியப் படையினால் இன்னும் முடியவில்லை என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், நோட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. இருந்தாலும், நேட்டோவில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, தலைநகா் கீவைக் கைப்பற்றுவதற்காக அதன் புகா் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறது, வடக்குப் பகுதி கீவ் மற்றும் சொ்னிஹிவ் நகரின் புகா் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாத இறுதியில் பின்வாங்கினா்.
எனினும், அவா்கள் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ளது போக எஞ்சியிருக்கும் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி முன்னேறி வந்தனா்.
ஏற்கெனவே ரஷியா ஆக்கிரமித்திருக்கும் கிரீமியா தீபகற்பத்தையும் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் இணைக்கும் வகையில், இடையில் அமைந்துள்ள மரியுபோல் நகரையும் கைப்பற்றுவதற்காக, அந்த நகரை பல வாரங்களாக முற்றுகையிட்டு ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இந்தச் சூழலில், லுஹான்ஸ்க் பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்துவதற்கு ரஷியப் படை தயாராகியுள்ளதால் பொதுமக்கள் அந்தப் பகுதியைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.