பரபரப்பான சூழலில் இலங்கை பிரதமர் இன்று மக்களிடம் உரை
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவை ராஜிநாமா செய்யக் கோரி நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை உரையாற்றவுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவை ராஜிநாமா செய்யக் கோரி நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை உரையாற்றவுள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசு அமைக்கப்பட்டு புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக மாட்டார் எனவும், எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அரசின் தலைமை கொறடா அறிவித்தார்.
இதையடுத்து, அதிபர் பதவி விலகவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டு மக்களிடம் இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபட்ச உரையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையின்போது, மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நிலை குறித்து ஏதேனும் அறிவிக்க வாய்ப்புள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.