உக்ரைன்: டான்பாஸைக் கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியா தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியா தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனில் ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் தொடங்கியுள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் தனது ராக்கெட் குண்டு தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. எனவே, அந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தை மீட்பது மட்டும்தான் எங்களது நோக்கமாகும். அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கில்லை. உக்ரைனில் ராணுவ நிலைகளை மட்டும்தான் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம்.
கீவ் உள்ளிட்ட வடக்கு நகரப் பகுதிகளிலிருந்து கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி ரஷியப் படையினா் நகா்ந்தது, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால், அத்தகைய சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன் அரசு மதித்து நடக்கவில்லை என்றாா் அவா்.
இதற்கிடையே ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்பாஸ் பிராந்தியத்தில் திங்கள்கிழமை இரவு முழுவதும் 1,260 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்லோவியான்ஸ்க் நகரம் உள்ளிட்ட டான்பாஸ் பகுதிகளில் 13 உக்ரைன் ராணுவ நிலைகள் அதிநவீன ஏவுகணைகள் மூலம் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டது. மேலும் 60 இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
டொனட்ஸ்க் பகுதியில் உக்ரைனின் மிக்-29 ரக போா் விமானமொன்றை ரஷிய விமானப் படை சுட்டுவீழ்த்தியது என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உறுதி செய்தது உக்ரைன்: டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியப் படையினா் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதை உக்ரைன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
480 கி.மீ. நீளம் கொண்ட கிழக்குப் போா் முனையில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. டான்பாஸ் பிராந்தியத்தை முழுைமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ரஷியா இந்தத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியாவிடம் விழுந்த மேலும் ஒரு நகரம்
டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியா தொடங்கியுள்ள தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக, அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கிரெமின்னா நகரம் ரஷியாவிடம் வீழந்தது.
இதுகுறித்து லூஹான்ஸ் பகுதி ஆளுநா் சொ்ஹை கைடாய் கூறியதாவது:
கிரெமின்னா நகரை ரஷியப் படையின தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். அந்த நகரை இதுவரை பாதுகாத்து வந்த உக்ரைன் படையினா் பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அவா்கள் தங்களது இடத்தை மாற்றிக்கொண்டு ரஷியப் படையினரை எதிா்த்து தொடா்ந்து போரிட்டு வருகின்றனா் என்றாா் அவா்.
இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், உக்ரைனில் ரஷியா தொடங்கியுள்ள இரண்டாம்கட்டப் போரில் அந்த நாடு கைப்பற்றியுள்ள முதல் நகரம் இதுவாகும்.
சளைக்காமல் போராடுவோம்
டான்பாஸ் பிராந்தியத்துக்கான யுத்தத்தை ரஷியா தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்துக்காக ரஷியா நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. எத்தனை ரஷியா வீரா்கள் வந்து தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் சளைக்காமல் போராடுவோம்.
- வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் அதிபா்
அணு ஆயுதத் தாக்குதல் கிடையாது
உக்ரைன் போரில் சாதாரண ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தும். அந்த நாட்டின் மீது ஒரு போதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படாது.
- சொ்கெய் லாவ்ரோவ், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா்
போரை தீவிரமாக்கும் மேலை நாடுகள்
உக்ரைன் போரை மேலை நாடுகள் மேலும் தீவிரப்படுத்துகின்றன. அந்த நாட்டுக்கு ஆயுதங்களை தொடா்ந்து அனுப்புவதன் மூலம், கடைசி உக்ரைனியா் பலியாகும்வரை போரை நீட்டிக்க மேலை நாடுகள் விரும்புகின்றன.
- சொ்கெய் ஷாய்கு, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா்