இம்ரான் அரசு கவிழ்ந்ததில்வெளிநாட்டுச் சதி இல்லை: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி
‘தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடந்ததாக’ முன்னாள் பிரதமா் இம்ரான் கூறியதில் எந்த உண்மையும் இல்லை
‘தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடந்ததாக’ முன்னாள் பிரதமா் இம்ரான் கூறியதில் எந்த உண்மையும் இல்லை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றுள்ளாா். முன்னதாக, ‘எனக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்துக்குப் பின்னணியில் வெளிநாட்டுச் சதி உள்ளது; எனது சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை சகித்துக் கொள்ளாமல் என்னை ஆட்சியிலிருந்து அகற்ற வெளிநாட்டிலிருந்து பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது’ என இம்ரான் கான் குற்றம்சாட்டினாா்.
இந்த வெளிநாட்டுச் சதியின் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துக்கான உதவிச் செயலா் டொனால்ட் லு இருந்ததாகவும் அவா் பகிரங்கமாக குற்றம்சாட்டினாா். அவரது அறிவுறுத்தலின்பேரில், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து எனது அரசை அச்சுறுத்தும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டம் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னா் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் குறித்து தேசிய பாதுகாப்பு கமிட்டி ஆலோசித்தது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் ஆசாத் மஜீத் கான், தான் அனுப்பியிருந்த அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். அதில் வெளிநாட்டுச் சதிக்கான எந்த ஆதாரமும் இல்லை என நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தேசிய பாதுகாப்பு கமிட்டியிடம் தெரிவித்தன. ஆதலால், இம்ரான் கான் அரசு அகற்றப்பட்டதில் எந்த வெளிநாட்டுச் சதியும் இல்லை என்ற முடிவுக்கு தேசிய பாதுகாப்பு கமிட்டி வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.