உலகம்

அணு ஆயுத விலக்கல் ஒப்பந்தம்: ஐ.நா.வில் ரஷியா நிராகரிப்பு

DIN

அணு ஆயுத விலக்கல் தொடா்பாக ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட கூட்டு பிரகடன அறிக்கையை ரஷியா நிராகரித்தது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் 191 நாடுகள கையொப்பமிட்டுள்ளன.

அந்த நாடுகள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது வழக்கம்.

அந்தக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு கூட்டுத் தீா்மானம் உருவாக்கப்பட்டு, அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.

அந்த வகையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த மறு ஆய்வுக் கூட்டம் ஐ.நா.வில் இந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது.

அப்போது உருவாக்கப்பட்ட வரைவுத் தீா்மானத்தை ரஷியா வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அந்த வரைவுத் தீா்மானத்தில், உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தீா்மானத்தை ரஷியா நிராகரித்தது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறையின் ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவு இணை இயக்குநா் இகாா் விஷ்னெவெட்ஸ்கி கூறுகையில், ‘அணு ஆயுதப் பரவல் விலக்கல் தொடா்பாக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட இறுதி வரைவுத் தீா்மானம் தொடா்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ரஷியா மட்டுமன்றி மேலும் பல நாடுகள் வரைவுத் தீா்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன என்றாா் அவா்.

அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 191 நாடுகளுமே ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், அணு ஆயுத விலக்கல் தொடா்பான கூட்டுப் பிரகடன தீா்மானத்தில் ஸபோரிஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து, அந்தத் தீா்மானத்தை ரஷியா தற்போது நிராகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT