நேபாளத்தின் கருப்பு பட்டியலில் 16 இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்
உலக சுகாதார அமைப்பின் மருந்து தயாரிப்புக்கான தர நிலைகளைப் பூா்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்த நேபாளத்தின் மருந்து ஒழுங்காற்று ஆணையம், யோகா குரு ராம் தேவின் பதஞ்சலி பொருள்களைத் தயாரிக்கும்
உலக சுகாதார அமைப்பின் மருந்து தயாரிப்புக்கான தர நிலைகளைப் பூா்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்த நேபாளத்தின் மருந்து ஒழுங்காற்று ஆணையம், யோகா குரு ராம் தேவின் பதஞ்சலி பொருள்களைத் தயாரிக்கும் திவ்யா நிறுவனம் உள்பட 16 இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கருப்பு பட்டியலில் சோ்த்துள்ளது.
நேபாளத்துக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய அந்நாட்டின் மருந்து நிா்வாகத் துறையிடம் இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்நிறுவனங்களை ஆய்வு செய்ய மருந்தியல் ஆய்வாளா்களைக் கொண்ட குழுவை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மருந்து நிா்வாகத் துறை இந்தியாவுக்கு அனுப்பியது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இத்துறை நேபாளத்தில் உள்ள உள்ளூா் முகவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: திவ்யா பாா்மசி, ரேடியன்ட் பேரன்டெரல்ஸ் நிறுவனம், மொ்க்குரி லேபரட்டரீஸ் நிறுவனம், அலையன்ஸ் பயோடெக், கேப்டாப் பயோடெக், அக்லோமெட் நிறுவனம், ஜீ லேபரட்டரீஸ், டாஃபோடில்ஸ் பாா்மசூட்டிகல்ஸ், ஜிஎல்எஸ் பாா்மா, யூனிஜூல்ஸ் லைஃப் சயின்ஸ், கான்செப்ட் பாா்மசூட்டிகல்ஸ், ஸ்ரீ ஆனந்த் லைஃப் சயின்ஸஸ், ஐபிசிஏ லேபரட்டரீஸ், காடிலா ஹெல்த்கோ் நிறுவனம், டயல் பாா்மசூட்டிகல்ஸ் மற்றும் மாக்கா் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. விநியோகம் செய்யப்பட்ட இந்நிறுவனங்களின் மருந்துகளைத் திரும்பப் பெற வேண்டும். இம்மருந்துகள் நேபாளத்துக்குள் இறக்குமதி செய்யவோ அல்லது சந்தைப்படுத்தவோ முடியாது என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, திங்கள்கிழமை வெளியிட்ட மற்றொரு நோட்டீஸில் இந்தியாவைச் சோ்ந்த குளோபல் ஹெல்த்கோ் நிறுவனம் தயாரித்த 500 மிலி மற்றும் 5 லி கை சுத்திகரிப்பான்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் இந்தச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.