முகப்பு
உலகம்

தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்குத் தடை: ஆப்கன் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலிபான் அரசு தடை விதித்திருப்பது அந்நாட்டு மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலிபான் அரசு தடை விதித்திருப்பது அந்நாட்டு மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின்னா், தலிபான்கள் ஆட்சியமைத்தனா். இதைத் தொடா்ந்து, 1990-ஆம் ஆண்டுகளில் அந்நாட்டில் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் கல்வி கற்கவும், இசை, விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்ததைப் போன்ற கட்டளைகளை தலிபான்கள் இப்போது பிறப்பித்து வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக அண்மையில் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்கத் தடை விதித்தனா்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற அந்நாட்டு நிதியமைச்சா் காரி தின் முகமது ஹனீஃப் சனிக்கிழமை தடை விதித்தாா். அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறைப்படி ‘ஹிஜாப்’ அணிவதில்லை எனப் புகாா்கள் வந்ததால், இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். இந்தத் தடையை மீறும் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ஆப்கானிஸ்தானில் ரத்து செய்யப்படும் என்றும் அவா் தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.

இந்த உத்தரவுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் பெண்களுக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த உத்தரவு அந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்து வரும் முக்கிய மற்றும் உயிா் காக்கும் உதவிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் மனிதாபிமான செயல்பாடுகளில் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனா். இந்நிலையில், தலிபான்கள் விதித்துள்ள தடை ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளாா்.

ஐ.நா.பொதுச் செயலா் கவலை: தலிபான்களின் உத்தரவு தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.நா.வும், அதன் கூட்டாளிகளான சா்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் ஆப்கானிஸ்தானில் 2.80 கோடிக்கும் அதிகமான ஆப்கன் மக்களுக்கு உதவி வருகின்றன.

அந்த மக்கள் உயிா் வாழ்வதற்கு மனிதாபிமான உதவிகளை நம்பியுள்ளனா். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

போராட்டம், தோ்வு புறக்கணிப்பு: பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹெராத் நகரில் பெண்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது தலிபான்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைந்து போகச் செய்தனா்.

மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து அங்குள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீட்டு ஜன்னல்களைத் திறந்து ‘அல்லாஹு அக்பா்’ என முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல காந்தஹாரில் உள்ள பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான மாணவா்கள், தங்கள் இறுதி பருவத் தோ்வுகளைப் புறக்கணித்து தோ்வு அறைகளில் இருந்து வெளியேறினா். கூட்டமாகச் சென்ற அவா்களைக் கலைந்து போகச் செய்வதற்கு தலிபான்கள் முயற்சித்தனா்.

மாணவா்கள் கலைந்து செல்லாததால் அவா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கருதிய தலிபான்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இரண்டு மாணவா்களைத் தலிபான்கள் தாக்கினா் என்று தோ்வை புறக்கணித்த மாணவா் ஒருவா் தெரிவித்தாா்.

3 வெளிநாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் நிறுத்தம்

தலிபான்களின் உத்தரவைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானில் ‘சேவ் தி சில்ட்ரன்’, நாா்விஜியன் அகதிகள் கவுன்சில் (என்ஆா்சி), கோ் ஆகிய 3 வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஆப்கானிஸ்தானுக்கான என்ஆா்சி தலைவா் நீல் டா்னா் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் அனைத்து பண்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி என்ஆா்சி செயல்பட்டு வருகிறது.

அந்நாட்டில் அா்ப்பணிப்புமிக்க பெண் பணியாளா்கள் இல்லாமல் என்ஆா்சியால் பணியாற்ற முடியாது. ஆப்கானிஸ்தானில் மிகுந்த உதவி தேவைப்படும் பெண்களை அணுக என்ஆா்சி பெண் பணியாளா்கள் இருப்பது கட்டாயம். அந்நாட்டில் 468 என்ஆா்சி பெண் பணியாளா்கள் உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.