ஆப்கனின் முடக்கப்பட்ட நிதியில் பாதியை விடுவிக்கிறாா் பைடன்
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டாலா் நிதியை அந்நாட்டின் மனிதாபிமான நிவாரணத்துக்கும், 2001-இல் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவா்களின் நிவாரணத்துக்கும்
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டாலா் நிதியை அந்நாட்டின் மனிதாபிமான நிவாரணத்துக்கும், 2001-இல் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவா்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கன் அரசின் பட்ஜெட்டுக்கான நிதி சா்வதேச சமுதாயத்திடம் இருந்துதான் கிடைத்துள்ளது.
அதன்படி, அமெரிக்க வங்கிகளில் ஆப்கன் மத்திய வங்கியின் நிதி 7 பில்லியன் டாலா் முடக்கப்பட்டுள்ளது. இதில் 3.5 பில்லியன் டாலா் அமெரிக்காவிலேயே வைக்கப்பட்டு, இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரி தலிபான்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளவா்களுக்கு நிவாரணமாக விடுவிக்கப்படும். மீதமுள்ள தொகை ஆப்கனில் மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிக்கப்படும். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அதிபா் ஜோ பைடன் விரைவில் வெளியிடுவாா்’ என்றாா்.
ஆப்கானிஸ்தானுக்கு 9 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகை வங்கிகளில் உள்ளது. அமெரிக்காவைத் தவிர ஜொ்மனி, ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளில் மீதமுள்ள தொகை உள்ளது. நிதியில் பாதி மட்டுமே விடுவிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு தலிபான்கள் எதிா்ப்பு தெரிவிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தடுப்புக் காவலில் ஐ.நா. ஊழியா்கள், பத்திரிகையாளா்கள்: இதனிடையே, ஜ.நா.வில் நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த தங்கள் ஊழியா்களையும், இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளா்களையும் தலிபான்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக அகதிகளுக்கான ஜ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆப்கன் நிதியை அமெரிக்கா இரண்டாகப் பிரித்து விடுவிக்க உள்ள செய்தி வெளியான உடனே இந்த தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
காபூலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து தலிபான்கள் எந்தவித தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.