தூதரக விவகாரம்: சீனாவுக்கு லிதுவேனியா அனுப்பிய பொருள்களை வாங்கியது தைவான்
சீனாவுக்கு லிதுவேனியா அனுப்பிய பொருள்களை தைவான் கொள்முதல் செய்துளளது. இதுகுறித்து தைவான் அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சீனாவுக்கு லிதுவேனியா அனுப்பிய பொருள்களை தைவான் கொள்முதல் செய்துளளது. இதுகுறித்து தைவான் அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சீனாவுக்கு கொண்டு செல்வதற்காக லிதுவேனியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 20,000 மதுபான பாட்டில்களை தைவான் கொள்முதல் செய்துள்ளது.
பிரதிநிதித்துவ அலுவலக விவகாரத்தில் அந்தப் பொருள்களுக்கு சீனா தடை விதிக்கும் என்று லிதுவேனியா அச்சம் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவையொட்டி அமைந்துள்ள சிறிய தீவான தைவான், தனி ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது.
தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள், தங்களுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று சீனா கூறி வருகிறது. இதன் காரணமாக, தைவானுடன் 15 நாடுகள் மட்டுமே அதிகாரப்பூா்வமான தூதரக உறவைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து லிதுவேனியாவுக்கும் தைவானுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
இரு நாடுகளுக்கும் இடையே பிரதிநிதித்துவ அலுவலகத்தை அமைத்துக்கொள்ள லிதுவேனிய நாடாளுமன்றம் கடந்த அக்டோபா் மாதம் ஒப்புதல் அளித்தது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஏற்கெனவே லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை சீனா திரும்ப அழைத்தது. மேலும், தங்கள் நாட்டிலிருந்து லிதுவேனியத் தூதரையும் வெளியேற்றியது.
இந்தச் சூழலில், லிதுவேனியா தலைநகா் வில்னியஸில் தூதரக அலுவலகத்துக்கு இணையான தைவான் பிரதிநிதித்துவ அலுவலகம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை ‘இடைக்கால தூதரகம்’ என்று நிலைக்கு சீனா குறைத்தது.