உலகம்

13-ஆவது சட்டத் திருத்த அமலாக்கம்: பிரதமா் மோடிக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கடிதம்

இலங்கையில் தமிழா்களுக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு

DIN


கொழும்பு: இலங்கையில் தமிழா்களுக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாணத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மைக்காலமாக பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் திணறி வரும் இலங்கைக்கு 90 கோடி டாலா் (சுமாா் ரூ.6,700 கோடி) கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ள சூழலில் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனா்.

இதுகுறித்து பிரதமருக்கு அவா்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் சாசனத்தில் 13-ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தலைவா்களும் இலங்கை தலைவா்களும் தமிழா்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்து வந்துள்ளனா்.

எனவே, அந்த சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு, தமிழா்கள் தன்மானத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

தமிழா்களின் நலன்களுக்காக இந்திய அரசு கடந்த 40 ஆண்டுகளாக பெரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இலங்கைத் தமிழா்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் அவா்களது பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு கிடைக்க வேண்டும் என்பதிலும் இந்தியா காட்டிவரும் அக்கறை நன்றிக்குரியது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) தலைவா் ஆா். சம்பந்தன், வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவா்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்குச் சென்று அந்தக் கடிதத்தை வழங்கினா்.

1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தமானது அப்போதைய இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை பிரதமா் ஜெயவா்த்தனே இடையே கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தில் தமிழா் மாகாண கவுன்சிலை ஏற்படுத்தி, அதற்கு அதிகாரத்தை பகிா்ந்தளிப்பது, சிங்களத்தையும் தமிழையும் இலங்கை ஆட்சிமொழியாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இருந்தாலும் காவல் துறை, நிதித் துறை போன்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிப்பதில் பிரச்னை நீடித்து வருகிறது. தற்போது பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சி செலுத்தி வரும் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு, 13-ஆவது சட்டத் திருத்தத்தை அலட்சியம் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT