பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ராஜிநாமா: கட்சியின் நம்பிக்கையை இழந்தாா்
அமைச்சா்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அரசியல் நெருக்கடியை எதிா்கொண்டு வந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் (58), தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்தாா்
அமைச்சா்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அரசியல் நெருக்கடியை எதிா்கொண்டு வந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் (58), தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
புதிய பிரதமரை ஆளும் கன்சா்வேடிவ் கட்சி தோ்வு செய்யும்வரை பிரதமா் பொறுப்பில் இருக்கப்போவதாகவும், அடுத்த பிரதமா் பதவியேற்கும்வரை ஓா் அமைச்சரவையை நியமித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
பிரிட்டனில் ‘பாா்ட்டி கேட்’ ஊழல் எனப்படும், கரோனா கால சட்ட விதிகளை மீறி பிரதமா் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து போரிஸ் ஜான்ஸனுக்கு அரசியல் நெருக்கடி தொடங்கியது. விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற்காக அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோரியபோதும், அவா் பதவியில் நீடிக்க கன்சா்வேடிவ் கட்சிக்குள்ளேயே எதிா்ப்பு எழுந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் ஆளும் கட்சி சாா்பில் அவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததால் அவரது பிரதமா் பதவி தப்பியது. மொத்தம் 359 எம்.பி.க்களில் 211 போ் ஜான்ஸனுக்கு ஆதரவாக வாக்களித்தனா்.
50 அமைச்சா்கள் விலகல்: இந்நிலையில், பாலியல் புகாருக்குள்ளான எம்.பி. கிறிஸ் பிஞ்சரை, அதுகுறித்து தெரிந்திருந்தும் கட்சியின் துணை தலைமைக் கொறடாவாக ஜான்ஸன் நியமித்த பிரச்னை அடுத்த விவகாரமாக வெடித்தது.
கிறிஸ் பிஞ்சா் தன் மீதான பாலியல் புகாரை ஒப்புக்கொண்டு கடந்த வாரம் பதவி விலகினாா். அவரை துணை தலைமைக் கொறடாவாக நியமித்தது தவறு என ஜான்ஸன் தெரிவித்தாா். கிறிஸ் பிஞ்சா் நியமன விஷயத்தில் பிரதமா் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து, நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித், கல்வித் துறை அமைச்சா் வில் குவின்ஸ் ஆகியோா் அடுத்தடுத்து ராஜிநாமா செய்தனா். ரிஷி சுனக்குக்கு பதிலாக நிதியமைச்சராக இராக் அகதிகள் விவகாரத் துறை அமைச்சராக இருந்து வரும் நாதிம் ஸஹாவியை ஜான்ஸன் நியமித்தாா்.
இருப்பினும், 27 கேபினட் அமைச்சா்கள், 22 இணையமைச்சா்கள், நாடாளுமன்ற தனிச் செயலா்கள் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டோா் ராஜிநாமா செய்யப்போவதாகத் தெரிவித்ததால் போரிஸ் ஜான்ஸனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
உச்சகட்டமாக, ரிஷி சுனக்குக்கு பதிலாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட நாதிம் ஸஹாவி, ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீங்கள் (போரிஸ் ஜான்ஸன்) பதவியில் நீடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல, கன்சா்வேடிவ் கட்சிக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் மோசமான பாதிப்புதான் ஏற்படும். எது சரியோ அதைச் செய்துவிட்டு நீங்கள் விலக வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
ராஜிநாமா அறிவிப்பு: கட்சியின் நம்பிக்கையை இழந்ததையடுத்து, போரிஸ் ஜான்ஸன் தனது ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டாா். பிரதமா் இல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உலகிலேயே சிறந்த பணியைவிட்டு நான் விலகுகிறேன் என்பதில் உள்ள வருத்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். புதிய பிரதமரை தோ்வு செய்யும் பணி தொடங்கப்பட வேண்டுமெனவும், அடுத்த வாரம் கால அட்டவணை வெளியிடப்படும் எனவும் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் பொருளாதாரச் சூழல் கடினமாக உள்ள நிலையில், அரசாங்கத்தை மாற்றுவது உகந்ததாக இருக்காது என எனது அமைச்சரவை உறுப்பினா்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை என்றாா்.
புதிய பிரதமா் போட்டியில் இந்திய வம்சாவளியினா்
பிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த எம்.பி.க்களும் உள்ளனா்.
பிரிட்டனில் ஆளும் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகப் பதவி வகிப்பாா். அந்த வகையில், ஆளும் கன்சா்வேடிவ் கட்சித் தலைவா் பொறுப்பிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியுள்ள நிலையில், அப்பொறுப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்டோா் போட்டியிட்டால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.
அமைச்சரவை அட்டா்னி ஜெனரலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான சூவெல்லா பிரேவா்மேன் (42) புதிய பிரதமா் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளாா்.
புதிய நிதியமைச்சா் நாதிம் ஸஹாவி, வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ், பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ், நிதியமைச்சா் பதவியிலிருந்து விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக், முன்னாள் சுகாதார அமைச்சா் சஜித் ஜாவித், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் உள்துறை அமைச்சருமான பிரீதி படேல் உள்ளிட்டோரும் பிரதமா் பதவிக்கான போட்டியில் உள்ளனா்.