முகப்பு
உலகம்

கோத்தபய ராஜபட்ச மேலும் 2 வாரங்கள் சிங்கப்பூரில் தங்க அனுமதி

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் நுழைவு இசைவை (விசா) சிங்கப்பூா் அரசு நீட்டித்துள்ளது. இதன்மூலம் அவா் மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
கோத்தபய ராஜபட்ச(கோப்புப்படம்)
பகிர்:

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் நுழைவு இசைவை (விசா) சிங்கப்பூா் அரசு நீட்டித்துள்ளது. இதன்மூலம் அவா் மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் வெளியாகும் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழில் புதன்கிழமை வெளியான செய்தியில், ‘கோத்தபயவுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை மேலும் 14 நாள்களுக்கு சிங்கப்பூா் அரசு நீட்டித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய தலைமறைவாகவில்லை என்றும், அவா் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் இலங்கை அமைச்சரவை செய்தித் தொடா்பாளா் பந்துல குணவா்தன செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். இந்நிலையில், கோத்தபயவின் விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபட்ச வெளியேறத் தடை நீட்டிப்பு: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரின் சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபட்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநா் அஜீத் நிவாா்ட் கப்ரால் ஆகியோா்தான் நேரடி காரணம் என்பதால், அவா்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் என்று ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினா் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனு கடந்த ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மூவரையும் ஜூலை 28-ஆம் தேதி வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தடையை தற்போது ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகமான ‘கொழும்பு கெசட்’ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.