பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு...இம்ரான் கானை தோற்கடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவா?
பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு முக்கிய கூட்டணிக் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 31) தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியின் இந்த அறிவிப்பு இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவா் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயா்வு ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவா் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன. கடந்த திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்ற கீழவையில் எதிர்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீப் நம்பிக்கையில்லா தீா்மானத்தை தாக்கல் செய்தார். இந்தத் தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை தொடங்கும் எனவும், ஏப். 3-இல் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். அவருக்கு கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் ஆதரவளித்து வந்தனா்.
நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க இம்ரான் கானுக்கு 172 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், அவருக்கு ஆதரவு அளிப்பதாக கூட்டணிக் கட்சிகள் உறுதியளிக்காத நிலையில், சொந்தக் கட்சி எம்.பி.க்களில் 20 பேரும் இம்ரானுக்கு எதிராக போர்க்கொடி உயா்த்தினா். இதனால், இம்ரான் கான் பிரதமராக நீடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
முக்கிய கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி), இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக புதன்கிழமை அறிவித்தது.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த பலோசிஸ்தான் அவாமி கட்சியும் (பிஏபி) இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழைப்பை ஏற்று இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனா்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.