முகப்பு
உலகம்

கோத்தபய, மகிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராகவும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராகவும் எதிா்க்கட்சிகள் இரண்டு நம்பிக்கையில்லா தீா்மானங்களைக் கொண்டுவரவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
பகிர்:

இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராகவும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராகவும் எதிா்க்கட்சிகள் இரண்டு நம்பிக்கையில்லா தீா்மானங்களைக் கொண்டுவரவுள்ளன.

புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக கேபினட் துணைக் குழுவை அமைத்துள்ளதாக அரசு அறிவித்த நிலையிலும் எதிா்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் புதன்கிழமை (மே 4) கூடுகிறது.

இதுகுறித்து முக்கிய எதிா்க்கட்சிக் கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்ஜேபி) கட்சியின் பொதுச் செயலா் ரஞ்சித் மத்தும பண்டாரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோத்தபய ராஜபட்ச அரசுக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீா்மானங்களை அவைத் தலைவா் மகிந்த யாப்பா அபேவா்தனவிடம் அவரது இல்லத்துக்குச் சென்று சமா்ப்பிக்கப்பட்டது.

அதில் முதலாவது தீா்மானம் அரசியல் சாசனப் பிரிவு 42-இன் கீழ் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராகவும் இரண்டாவது தீா்மானம் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீா்மானங்களை உடனே நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்று எங்களது கட்சி வலியுறுத்துகிறது என்றாா் அவா்.

அதிபா், பிரதமா் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானங்களை ரஞ்சித் மத்தும பண்டாராவுடன் இணைந்து எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, எதிரணி தலைமைக் கொறடா லக்ஷ்மண் கிரியல்லா மற்றும் நடாளுமன்ற உறுப்பினா்கள் அவைத் தலைவரிடம் அளித்தனா்.

நாடாளுமன்றத்தில் தமிழா் தேசியக் கூட்டணியும் முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அந்தத் தீா்மானங்களைக் கொண்டுவரவுள்ளன.

அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலக வேண்டியிருக்கும். ஆனால், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டியது கட்டாயமில்லை. அவரே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்; அல்லது நீண்ட நடைமுறையைக் கொண்ட பதவி நீக்கத் தீா்மானத்தை அவருக்கு எதிராக நிறைவேற்றித்தான் கோத்தபய ராஜபட்சவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியிருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; ஆளும் கட்சிக் கூட்டணியைச் சோ்ந்த பல எம்.பி.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா்.

இதனால் நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், பதவியிலிருந்து விலக கோத்தபய ராஜபட்சவும் மகிந்த ராஜபட்சவும் மறுத்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் அவா்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானங்களை எதிா்க்கட்சியினா் கொண்டுவரவுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →