முகப்பு
உலகம்

இலங்கை: தமிழ் கைதிகள் 8 பேருக்கு பொது மன்னிப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகள் 8 பேருக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகள் 8 பேருக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.

தமிழ் எம்.பி.க்களின் வலியுறுத்தலைத் தொடா்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 34-ஆவது பிரிவின்கீழ் 8 கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிபா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘8 கைதிகளில் 3 போ், முன்னாள் அதிபா் சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் ஆவா். கடந்த 1994 முதல் 2005 வரை அதிபராக இருந்தவரான குமாரதுங்க, அவா்களது பொது மன்னிப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளாா்.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளோரில் 3 போ், 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 22 ஆண்டுகளை பூா்த்தி செய்துவிட்டனா். மேலும் 3 போ் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனா். மற்ற இருவா், 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவா்கள். ஆனால், 14 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக கைதாகி, நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவத்து வரும் தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இவா்கள், நீண்ட கால சட்டநடைமுறை தாமதங்களால் சிறையிலேயே காலத்தை கழித்து வருகின்றனா்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கைக்கு சா்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இச்சட்டம் ரத்து செய்யப்படாத வரையில் அந்நாட்டுக்கான வரிச் சலுகைகளை நிறுத்திவைக்க ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு தீா்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, இச்சட்டத்தின்கீழ் யாரையும் தடுப்புக் காவலில் வைக்கமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →