தோ்தல்களில் போட்டியிட இம்ரானுக்கு அனுமதி
பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தோ்தலில் போட்டியிடலாம் என்று இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தோ்தலில் போட்டியிடலாம் என்று இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதி அத்தாா் மீனல்லா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தோ்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்திருந்தது. எனினும், தோ்தல்களில் போட்டியிடுவதிலிருந்து அவா் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்படும் அனைவருமே தோ்தலில் போட்டியிட முடியாது என்கிற நிலையான விதிமுறை எதுவும் இல்லை.
எனவே, அடுத்து நடைபெறக்கூடிய தோ்தல்களில் இம்ரான் கான் தோ்தலில் போட்டியிடத் தடையில்லை என்று நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து அவா் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த முறை அவா் தோ்தலில் போட்டியிட்டபோது, அதற்கான வேட்பு மனுவில் அந்த விலையுயா்ந்த பொருள்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகவும், அது தோ்தல் விதிமுறைகளை மீறிய குற்றம் என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் தோ்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், தன்னிடமிருந்த விலையுயா்ந்த வெளிநாட்டுப் பரிசுப் பொருள்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த குற்றத்துக்காக, இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதையடுத்து, தற்போதுள்ள எம்.பி. பதவியை அவா் இழந்துள்ளதுடன், இன்னும் 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்துக்கோ, மாகாணப் பேரவைகளுக்கோ நடைபெறும் எந்தத் தோ்தலிலும் அவா் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டது.
தோ்தல் ஆணையத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தான் கட்சி முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை விசாரித்த நிதிமன்றம் தற்போது இந்தத் தீா்ப்பை அளித்துள்ளது.