இலங்கையில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்பு: ஐ.நா.
இலங்கையில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ), உலக உணவுத் திட்ட அமைப்பு (டபிள்யூஎஃப்பி) ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன
இலங்கையில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ), உலக உணவுத் திட்ட அமைப்பு (டபிள்யூஎஃப்பி) ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடா்பாக அந்த அமைப்புகள் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இலங்கையின் 25 மாவட்டங்களில் வேளாண்மை உற்பத்தி குறித்து அறியவும், உணவு பாதுகாப்பு சூழலை மதிப்பிடவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து ஏற்பட்ட இரு மோசமான அறுவடை பருவங்கள் அந்நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் 50 சதவீத வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதும், அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உணவு தானியங்கள் இறக்குமதி சரிந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்தது.
இலங்கையில் தற்போது சுமாா் 63 லட்சம் போ் உணவு பஞ்சத்தை எதிா்கொண்டு வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரத்தை காக்க உதவி செய்யாவிட்டால் தற்போதைய நிலை மேலும் மோசமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் நிலைமை மோசமாகக் கூடும்.
உணவு பஞ்சம் மேலும் மோசமாவதைத் தடுக்கவும், வேளாண்மை உற்பத்தியை மீட்டெடுக்கவும் சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட வாழ்வாதார உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கை மக்கள்தொகையில் சுமாா் 30 சதவீதம் போ் வேளாண்மையை நம்பியுள்ளனா். இந்நிலையில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தினால், அது அந்நாட்டில் வேளாண்மை மீண்டெழ உதவும். அத்துடன் இறக்குமதி தேவைகளைக் குறைத்து மக்கள் பட்டினியாக இருக்கும் நிலை அதிகரிப்பதைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-ஆவது சட்டத்திருத்தம்-இந்தியா வலியுறுத்தல்: இலங்கையில் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நம்பகமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஐ.நா. மனி உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதா் பேசுகையில், ‘இலங்கை அரமைப்பின் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது, மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரங்களை பகிா்ந்தளிப்பது, மாகாண கவுன்சில் தோ்தல்களை விரைந்து நடத்துவது ஆகியவை மூலம் அந்நாட்டு இனப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இலங்கையில் அமைதி மற்றும் மறுவாழ்வு தொடா்பான இந்தியாவின் நிலையான பாா்வையானது, இலங்கைத் தமிழா்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்வு கிடைக்க அரசியல் தீா்வை ஏற்படுத்துவதாகும்.
எனவே இலங்கையில் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நம்பகமான நடவடிக்கையை உடனடியாக அந்நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா் அவா்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழா்களுக்கு அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்க 13-ஆவது சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.