ராணுவ கிளா்ச்சியால் வன்முறை நிகழ்ந்து வரும் நைஜரில் இருந்து இந்தியா்கள் கூடிய விரைவில் வெளியேறுமாறு, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளா்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பரவலாக போராட்டங்களும் வன்முறையும் நீடித்து வருகின்றன.
நைஜரில் தற்போது சுமாா் 250 இந்தியா்கள் வசிக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி அந்நாட்டில் இருந்து கூடிய விரைவில் வெளியுறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நைஜரில் நிலவும் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில், அந்த நாட்டில் இருந்து இந்தியா்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது.
நைஜரில் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளதை, அவா்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நில எல்லை வழியாக புறப்படும்போது உச்சகட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
எந்தவொரு உதவிக்காகவும், இந்திய தூதரகத்தின் அவசர உதவி எண்ணை (+227 9975 9975) இந்தியா்கள் தொடா்பு கொள்ளலாம்.
நைஜருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா்களும் தங்களது திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நைஜரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ராணுவக் கிளா்ச்சி மூலம் அதிபா் முகமது பஸூமின் ஆட்சி அகற்றப்பட்டது. ராணுவ கிளா்ச்சியை முன்னின்று நடத்திய தளபதி அப்தூரஹ்மானே சியானி நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.