அல் ஜஸீரா புகைப்பட நிபுணர் பலி; செய்தியாளர் படுகாயம்
காஸாவிலிருந்து வெளியேற மாட்டேன் என்று கூறிய அல் ஜஸீரா புகைப்பட நிபுணர் சமெர் அபு தக்கா டிரோன் தாக்குதலில் பலியானார்,
காஸாவிலிருந்து வெளியேற மாட்டேன் என்று கூறிய அல் ஜஸீரா புகைப்பட நிபுணர் சமெர் அபு தக்கா டிரோன் தாக்குதலில் பலியானார், செய்தியாளர் அல் தஹ்தோ படுகாயமடைந்துள்ளார்.
அல் ஜஸீரா செய்தியாளர் அல் தஹ்தோ, கடந்த அக்டோபர் மாதம் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தனது மனைவி, மகன், மகள் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து, மறுநாளே, தாக்குதல் தொடர்பான செய்திகளை அளிக்க போர்க்களத்துக்கு வந்து பணியில் இணைந்ததன் மூலம் உலக மக்களால் அறியப்பட்டவராக இருந்தார்.
இதையும் படிக்க: சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
சமெர் அபு தக்கா, காஸாவில் அல் ஜஸீரா நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் மற்றும் விடியோ எடிட்டராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். இந்த தகவலை அல் ஜஸீராவின் மேலாண்மை இயக்குநர் டிமா கதிப் பதிவிட்டுள்ளார்.
பலியான அபு தக்க மூன்று குழந்தைகளுக்கு தந்தை. அவரது குடும்பத்தினர் பெல்ஜியத்தில் வசிக்கிறார்கள். போர் உண்டான பிறகு, அவர் காஸாவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.
அவர் எப்போதும் சொல்வார், என் காஸாவிலிருந்து வெளியேற மாட்டேன், ஒரு நாள், எனது குடும்பத்தினரும் காஸாவுக்கு திரும்புவார்கள் என்று டிமா கதிப் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் இருந்த பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியதில் சமெர் அபு தக்கா பலியானதாகவும், இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சமெர், சிகிச்சை கிடைக்காமல் 5 மணி நேரம் ரத்தப்போக்குடன் விடப்பட்டிருந்தார் என்றும், அவரை ஆம்புலன்ஸ் நெருங்க விடாமல் இஸ்ரேல் படை தடுத்ததாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிர்பிழைத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் அல் தஹ்தோ படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. காங்கிரஸுக்கு நன்கொடை அளித்த காயத்ரி ரகுராம்!
டிசம்பர் 15ஆம் தேதி, பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.