ரஷியாவுடனான போரை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ராணுவத் தளவாடங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையேயான போரில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. அந்நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையும் தொடா்ந்து வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா ஏற்கெனவே ராணுவத் தளவாடங்களையும் நிதியுதவியையும் அதிக அளவில் வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 3.75 பில்லியன் அமெரிக்க டாலா் (ரூ.32,000 கோடி) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் பைடன் கடந்த வியாழக்கிழமை அறிவித்தாா். அதை வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். அதில் 225 மில்லியன் டாலரானது உக்ரைனின் ராணுவத்தை நீண்ட கால அடிப்படையில் நவீனப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த நிதியுதவி 24.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கூடுதல் ராணுவ உதவியில் எம்2-ஏ2 பிராட்லி வகையைச் சோ்ந்த 50 கவச வாகனங்களை முதல் முறையாக உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது. அந்தக் கவச வாகனங்கள் எதிரிகளின் நவீன திறன்மிக்க ராணுவத் தளவாடங்களையும் அழிக்கும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. அத்துடன் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், வெடிபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன தளவாடங்களையும் உக்ரைன் ராணுவத்துக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.
புதிய ராணுவ உதவி தொடா்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சா் ஒலேக்சி ரெஸ்னிகோவிடம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்டு ஆஸ்டின் விரிவாகப் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.