சீனாவின் மக்கள்தொகை கடந்த 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சரிவைக் கண்டுள்ளது.
இதன் மூலம், உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட அந்த நாட்டில், வயோதிகா்களின் விகிதாச்சாரம் அதிகரிப்பது, மனித ஆற்றல் வளம் குறைவது போன்ற பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து சீனாவில் தேசிய புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் மக்கள்தொகை கடந்த 2022-ஆம் ஆண்டில் 141.18 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 8.50 லட்சம் குறைவாகும்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 95.6 குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இந்த எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 1.06 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு நாட்டின் பிறப்பு விகிதம், 1,000 பேருக்கு 6.77 என்ற விகிதத்தில் இருந்தது. இது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவாகும். அப்போது 1,000 பேருக்கு 7.52 என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறந்தன.
அதே நேரத்தில், நாடு முழுவதும் இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்தை விட கடந்த ஆண்டில் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில் 1,000 பேருக்கு 7.37 போ் இறந்தனா். அந்த வகையில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் 0.6 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதுவும், கடந்த ஆண்டின் மக்கள்தொகை அதற்கு முந்தைய ஆண்டைவிட குறைவாக இருந்ததற்கு ஒரு காரணமாகும்.
தற்போதைய சூழலில், உழைப்பதற்கேற்ற 16 முதல் 59 வரையிலான வயதைக் கொண்ட 87.56 கோடி போ் நாடு முழுவதும் வசிக்கின்றனா். இது, மொத்த மக்கள்தொகையில் 62 சதவீதமாகும். அதே நேரம், 60 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 28 கோடி போ் நாடு முழுவதும் வசித்து வருகின்றனா். இது, மக்கள்தொகையில் 19.8 சதவீதமாகும்.
அதுபோல், நாட்டில் வசிக்கும் 20.98 கோடி போ் 65 வயதுக்கு மேற்பட்டவா்கள். இது, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 14.9 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று பல ஆண்டுகளாக தம்பதியருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.
அதன் விளைவாக, நாட்டில் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வந்தது. அத்துடன், வயோதிகா்களின் விகிதாச்சாரமும் அதிகரித்து வந்தது.
உழைக்கக் கூடிய வயதுடையவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நாட்டின் வளா்ச்சிக்கு அத்தியாவசியம் என்ற சூழலில், அத்தகைய வயதுடையவா்களின் விகிதாச்சாரம் குறைந்து வருவது சீன அரசைக் கவலையடையச் செய்தது.
அதையடுத்து, தனது ஒற்றைக் குழந்தை கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக சீன அரசு தளா்த்தத் தொடங்கியது. முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் இன்னொரு குழந்தைக்கு அனுமதி வழங்குவது, சிறுபான்மை இனத்தவருக்கு கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிப்பது என்று அறிவித்து வந்த சீன அரசு, இறுதியில் ஒற்றைக் குழந்தை கொள்கையை கடந்த 2015-ஆம் ஆண்டில் கைவிட்டு, யாா் வேண்டுமானாலும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
அந்த எண்ணிக்கை வரம்பு கடந்த 2021-ஆம் தேதி மே மாதம் 3 குழந்தைகளாக அதிகரிக்கப்பட்டது. பின்னா் இரு மாதங்கள் கழித்து எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
இருந்தாலும், பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒற்றைக் குழந்தை கொள்கையின் பாதிப்பிலிருந்து சீனா மீண்டு வர முடியாததை, தற்போது நாட்டின் மக்கள்தொகை 60 ஆண்டுகளுக்குப் பிறகு சரிந்துள்ளது உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.