தனது கைதுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ராணுவ நிலைகள் தாக்கப்பட்டதற்கு ஆளும் கட்சிக் கூட்டணியின் சதிச் செயலே காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது: மே 9 வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமான கட்சியின் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் தாக்குதலில் யாருக்குத் தொடா்பு இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் எளிதான காரியம் ஆகும்.
தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது ராணுவ நிலைகள் தாக்கப்பட்டால் எந்தக் கட்சிக் கூட்டணிக்கு லாபம் என்ற கேள்வியை எழுப்பினாலே, அந்தத் தாக்குதல்களை யாா் நடத்தியிருப்பாா்கள் என்பதற்கான விடை தெரிந்துவிடும்.
அந்தப் போராட்டத்துக்குப் பிறகு 10,000 தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தொண்டா்கள், ஆதரவாளா்கள், கட்சி ஆதரவு செய்தியாளா்கள் கைது செய்யப்பட்டனா். இதன் மூலம், அந்தத் தாக்குதல் முன்கூட்டிய சதித் திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்று தனது ட்விட்டா் பதிவுகளில் இம்ரான் குறிப்பிட்டுள்ளாா்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அவற்றில் இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக அவா் கடந்த 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு வந்தாா். அங்கு அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் வேறொரு வழக்கில் அதிரடியாகக் கைது செய்தனா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.
எனினும், இம்ரான் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் அவரது கட்சி ஆதரவாளா்கள் மே 9-ஆம் தேதியும், 10-ஆம் தேதியும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தாக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.