சூடானில் எஸ்டிஎஃப் துணை ராணுவப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 125 ராணுவ வீரா்கள் விடுவிக்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் சா்வதேச குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எஸ்டிஎஃப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 125 ராணுவ வீரா்கள், செஞ்சிலுவை சங்கம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் தலைநகா் காா்ட்டூமிலிருந்து 160 கி.மீ. தொலைவிலுள்ள வாட் மடானி நகருக்கு வாகனங்களில் புதன்கிழமை அழைத்து வரப்பட்டனா்.
அவா்களில் 44 போ் காயமடைந்திருந்தனா். விடுவிக்கப்பட்ட அந்த 125 பேரும் எங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனா் என்ற விவரம் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த அதிபா் அல்-பஷீரின் சா்வாதிகார அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரை ராணுவம் 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றியது. அதனைத் தொடா்ந்து, ஆட்சியதிகாரத்தை ஜனநாயக அரசிடம் ஒப்படைக்கும் வரை இடைக்கால ஏற்படாக சிவில்-ராணுவ கூட்டணி அரசு ஏற்படுத்தப்பட்டது.
எனினும், அந்த அரசையும் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்தன.
இந்தச் சூழலில், ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இந்த மோதலில் இதுவரை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.