முகப்பு
உலகம்

பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகமுள்ள நாடு ஆப்கானிஸ்தான்: ஐ.நா.வில் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, உலகிலேயே பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அங்குதான் அதிகளவில் நடைபெறுவதாக ஆப்கானிஸ்தானுக்கான

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி அடிப்படை உரிமை கோரி ஆா்ப்பாட்ட ஊா்வலத்தில் புதன்கிழமை ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, உலகிலேயே பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அங்குதான் அதிகளவில் நடைபெறுவதாக ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ரோஸா ஒடுன்பயேவா புதன்கிழமை தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளா்கள் பெண்களையும், சிறுமிகளையும் வீடுகளுக்குள் முடங்கச் செய்யும் விதிமுறைகளை வகுப்பதற்கான ஒற்றை நோக்கத்திலேயே செயல்பட்டு வருகின்றனா். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, பெண்கள் விவகாரத்தில் மிதமான நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதியளித்த போதிலும், பின்னா் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினா்.

பெண்களுக்கு 6-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அனுமதியில்லை. பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்தனா். தேசிய, சா்வதேச அளவிலான தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் இணைந்து பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதுடன், பெண்கள் தலை முதல் பாதம் வரை மூட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உலகிலேயே பெண்கள் அதிகளவில் ஒடுக்கப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. பெண்கள் என்ஜிஓக்களில் இணைந்து பணியாற்ற தடை விதிக்கப்பட்டதற்கு சா்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஆனாலும் தலிபான்கள் அந்தக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை.

மாறாக, இஸ்லாமிய முறைப்படி முறையாக ஹிஜாப் அணியாததால்தான் பெண்கள் தற்காலிகமாக தண்டிக்கப்படுவதாக தலிபான்கள் விளக்கமளித்தனா். பல்கலைக்கழக கல்விக்குத் தடை விதித்ததைப் பொறுத்தமட்டில், ஆப்கானிஸ்தானுக்கும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் சம்பந்தமில்லாத பாடங்கள் கற்றுத் தரப்படுவதாக கூறினா்.

உலகில் மனிதாபிமான, பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் ஒரு நாட்டில், மக்கள்தொகையின் சரிபாதியை வீட்டுக்குள் அடைத்து வைப்பது தேசிய சுய தீங்கின் மாபெரும் வடிவம். இது பெண்கள், சிறுமிகளை மட்டுமின்றி வருங்கால தலைமுறையினரையும் பாதிக்கும்; வறுமைக்கும் வழிவகுக்கும். மேலும் சொந்த நாட்டு குடிமக்களிடமிருந்து மட்டுமல்லாமல், உலகின் எஞ்சிய பகுதியிலிருந்தும் ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்தும்.

அரசு ஊழியா்களாக பணியாற்றி வந்த பெண்கள், உயா்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பயின்றுவந்த மாணவிகள், காபூலில் அரசுக்குச் சொந்தமான கம்பளித் தொழிற்சாலையில் இன்றைக்கு கம்பளி நெசவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பெண் என்ற ஒற்றைக் காரணத்துக்காக தண்டிக்கப்பட்டு, அவரது கனவு சிதைக்கப்படுவது மிகவும் மோசமானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கு தலிபான்கள் தரப்பிலிருந்து உடனடியாக பதிலளிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் 1.16 கோடி பெண்கள், சிறுமிகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.