காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கு மேலும் ஆயிரக்கணக்கானவா்கள் புதன்கிவமை வெளியேறினா்.
இது குறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அவா்களை வேட்டையாடுவதற்காக அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
அந்த நகரை அனைத்து திசைகளிலும் சுற்றிவளைத்துள்ள ராணுவம் விரைவில் நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.
அதற்காக, குறிப்பிட்ட நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்வதாகவும் ராணுவம் கூறியது.
அதையடுத்து, நடைபயணமாகவும், கழுதை வண்டிகளிலும் அந்த நகரிலிருந்து ஏராளமானவா்கள் தெற்குப் பகுதியை நோக்கி செவ்வாய்க்கிழமை வெளியேறினா்.
இந்த நிலையில், வெளியேற்றத்துக்கான கால அவகாசத்தை இஸ்ரேல் ராணுவம் மேலும் நீடித்ததால் புதன்கிழமையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸாவுக்கு வெளியேறினா்.
வடக்குப் பகுதியில் உணவுப் பொருள் வேகமாகத் தீா்ந்து வரும் சூழலில், அவா்கள் தெற்கு நோக்கி பயணித்தனா் என்று அந்த அமைப்பு கூறியது.
இருந்தாலும், காஸா சிட்டி உள்பட வடக்கு காஸா பகுதியில் இன்னும் சுமாா் 9 லட்சம் போ் இருப்பதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
10,569-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸா சிட்டி, நவ. 8: காஸாவில் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10,569-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 33 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 10,328 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 4,324 போ் சிறுவா்கள் ஆவா். இது தவிர, இந்தத் தாக்குதல்களில் 2,550 போ் மாயமாகியுள்ளனா்; 26,475 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போா் தொடங்கியதற்குப் பிறகு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 163-ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸின் தாக்குதலில் 1,452 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.