முகப்பு
உலகம்

காடலோனியாவில் தண்ணீர்ப் பஞ்சம்! கடல்வழி வரவழைக்கத் திட்டம்!!  

ஸ்பெயின் நாட்டில் வறட்சி பாதித்த வட கிழக்குப் பகுதியில் தண்ணீருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 30 நவம்பர், 2023 at 2:36 PM
2008-ல் பார்சிலோனா துறைமுகத்துக்குக் குடிநீர் ஏற்றிவந்த கப்பலுக்குச் செல்லும் பணியாளர்கள் - கோப்பிலிருந்து
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் வறட்சி பாதித்த வட கிழக்குப் பகுதியில் தண்ணீருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான காடலோனியாவின் தலைநகரான பார்சிலோனாவுக்கு எதிர்வரும் மாதங்களில் பயன்பாட்டுக்கான தண்ணீரைப் படகுகளில் கொண்டுவரும் தேவை ஏற்படலாம் என காடலோனிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவின் 5-வது பெரிய நகரும் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகருமான பார்சிலோனா உள்ளிட்ட காடலோனியாவின் 60 லட்சம் மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவில் 18 சதவிகிதமே தண்ணீர் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அனைத்து ஏரிகளையும் சேர்த்தால் கொள்ளளவில்  வெறும் 43 சதவிகிதம் மட்டும் தண்ணீர் இருக்கிறது.

Advertisement

கடலோனியாவில் வறட்சிக் காலம் நீடித்த நிலையில், பருவகால மாற்றங்கள் காரணமாக வெப்பமும் வறண்ட காலநிலையும் இணைந்துகொண்டதே தற்போதைய மோசமான நிலைமைக்குக் காரணம் என்று ஸ்பானிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, ஐரோப்பாவின் மிகப் பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத்தான் குடிநீருக்காக பார்சிலோனா நம்பியிருக்கிறது.

கடலோனியா தற்போது அதிகாரப்பூர்வமாகவே வறட்சியைப் பொருத்தவரையில்  ‘நெருக்கடி நிலைக்கு முந்தைய’ கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஒரு நாளுக்கான தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாடு 230 லிட்டர்களிலிருந்து 210 லிட்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காடலோனியா முழுவதும் வீதிகளைச் சுத்தப்படுத்தவும் புல்வெளிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதற்கும் குடிதண்ணீரைப் பயன்படுத்துவதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் தடை விதித்திருக்கின்றன. தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர்ப் பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் வழங்கும் ஏரிகளில் இருப்பின் அளவு 16 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்தால் முழு நெருக்கடி நிலை ஏற்படும். தண்ணீர்ப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும். வேளாண் பாசனத்துக்குத் தண்ணீரைப் பயன்படுத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

இப்போதைக்குள் மழை பெய்யாவிட்டால் இன்னும் சில வாரங்களில் இந்த நிலை ஏற்பட்டுவிடும் என்று அரசு அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை மழை பெய்யாவிட்டால் குடிநீரை டேங்கர்களில் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். வறட்சிக் காலத்தில் இது மிகவும் செலவாகக் கூடிய ஒன்றாக இருக்கும். 2008 வறட்சியின்போதும் இவ்வாறுதான் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

‘கெடுவினையாக நாம் எல்லாவற்றுக்குமே ஆயத்தமாக இருக்க வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவும் நிலைமை தொடர்ந்தால் படகுகளில் தண்ணீர் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியுமில்லை’ என்று காடலோனியா பிராந்திய தலைவர் பியர் ஆரகன்ஸ் தெரிவித்துள்ளார். டேங்கர்களில் தண்ணீர் கொண்டுவருவது தொடர்பாக ஸ்பெயின் அமைச்சரவையுடன் விவாதித்து வருவதாகவும் ஆரகன்ஸ் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.