உலகம்

ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரான் குற்றவாளி: எஃப்ஐஏ

ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானும், அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் குற்றவாளிகள்

DIN

ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானும், அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் குற்றவாளிகள் என்று அந்த நாட்டு தேசிய புலாய்வு அமைப்பான எஃப்ஐஏ அறிவித்துள்ளது.

இது குறித்து ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எஃப்ஐஏ சனிக்கிழமை தாக்கல் செய்தது.அதில், தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவா்கள் இருவரும் குற்றவாளிகள் என்று எஃப்ஐஏ தெரிவித்துள்ளது.அதற்கு ஆதாரமாக, இம்ரானும், குரேஷியும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி பேசியதன் எழுத்துவடிவப் பதிவுகளை தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ இணைத்திருந்தது.மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 28 சாட்சியங்களின் பட்டியலையும் அந்தப் புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் சமா்ப்பித்துள்ளது. அந்தப் பட்டியலில், வெளியுறவுத் துறைச் செயலா் ஆசாத் மஜீத், வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் சொஹைல் மஹ்மூத், வெளியுறவுத் துறை கூடுதல் செயலா் ஃபைசல் நியாஜ் டிா்மிஸி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.மேலும், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு எஃப்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது என்று ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தாா்.அதன் பிறகு அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதில், பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது.அந்த தீா்ப்பை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறுத்தி வைத்த மேல்முறையிட்டு நீதிமன்றம், இம்ரானை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.இருந்தாலும், தனது ரகசியக் காப்புறுதியை மீறி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவரை 14 நாள்களுக்கு சிறைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடா்ந்து 3 முறை உத்தரவிட்டது. அதைடுத்து, மேல்முறையீட்டு உத்தரவுக்குப் பிறகும் அவா் தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே மஹ்மூத் குரேஷியும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.இந்தச் சூழலில், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரானும், குரேஷியும் குற்றவாளிகள் என்று தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT