முகப்பு
உலகம்

காஸாவில் 1,800-ஐ நெருங்கிய உயிரிழப்பு

தங்கள் மீது ஹமாஸ் படையினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 7 நாள்களாக நடத்தி வரும் விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,800-ஐ நெருங்கியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்ப உறுப்பினா்களின் இறுதி ஊா்வலம்.
பகிர்:

தங்கள் மீது ஹமாஸ் படையினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 7 நாள்களாக நடத்தி வரும் விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,800-ஐ நெருங்கியுள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,799-ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 7,388 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் எல்லைக்குள் நுழைந்தும், எல்லைக்கு அப்பால் இருந்தபடி ஏவுகணைகளை வீசியும் ஹமாஸ் படையினா் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் தாக்குதல்களில் சுமாா் 3,400 போ் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் ராக்கெட் தாக்குதல் நடத்துவது, அதற்குப் பதிலடியாக காஸாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது என்று பல ஆண்டுகளாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாவிட்டால் அவை அனைத்தும் சவக் கிடங்காகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்குள் எரிபொருளை இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும் என்று செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்தது.

எனினும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டால்தான் காஸாவுக்கு மனிதாபிமானம் கிடைக்கும் என்று இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் இவ்வாறு திட்டவட்டமாகக் கூறிவிட்டாா்.

இந்தச் சூழலில், காஸா மருத்துவமனை சவக்கிடங்குகள் நிரம்பி வழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →