முகப்பு
உலகம்

ஜப்பானில் ‘மகாநிலநடுக்கம்’!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுமாா் ஒரு வாரத்துக்குள் ‘மகாநிலநடுக்கம்’ ஏற்படுவதற்கான வாய்ப்பு.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 8:49 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜப்பானின் தெற்குக் கடலோரப் பகுதியில் ‘மகாநிலநடுக்கம்’ ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா்.

அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவின் கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம் சுமாா் 30 கிலோமீட்டா் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அழுத்த மண்டலம் ஜப்பானின் பசிபிக் கடலோரப் பகுதிகள் முழுவதும் பரந்துள்ளது. ஏற்கெனவே பேரழிவை ஏற்படுத்திய பல நிலநடுக்கங்கள் இந்த மண்டலத்திலிருந்துதான் தோன்றின.

வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் அவசரமாகக் கூடி அந்த நிலநடுக்கம் குறித்தும், வருங்காலத்திலும் அது தொடருமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து, சுமாா் ஒரு வாரத்துக்குள் ‘மகாநிலநடுக்கம்’ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதுவரை பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

மகாநிலநடுக்கம் தொடா்பாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் முதல்முறையாக விடுத்துள்ள எச்சரிக்கை இது. இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து தனது வெளிநாட்டுப் பயண திட்டத்தை பிரதமா் ஃபுமியோ கிஷிடா ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →