காஸா போா் நிறுத்தத்துக்கு அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவு திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான இரண்டரை மணி நேரம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பிளிங்கன் இதனை அறிவித்தாா்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ஹமாஸ் ஆயுதப் படையினருடன் நடைபெற்று வரும் சண்டை நிறுத்தம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 9-ஆவது முறையாக பிளிங்கன் மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இஸ்ரேல் தலைநகா் டெல்அவிவில் அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், ‘காஸாவில் போா்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது ஆகிய அமெரிக்க முன்மொழிவுகளை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு உறுதிப்படுத்தினாா்.
இதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு பிணைக் கைதிகளை திருப்பி அனுப்புவதன் மூலம், பாலஸ்தீனியா்களின் 10 மாத துன்பங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ என்றாா்.
இதையடுத்து எகிப்துக்கு ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை செல்கிறாா்.
அண்டை நாடுகளுக்கும் பரவி உள்ளஇஸ்ரேல்-ஹமாஸ் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தாா் ஆகிய நாடுகள் பல மாதங்களாக முயன்று வருகின்றன.