ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தாங்கள் நியமித்த தூதா் மௌலவி ஹக்கானியை அந்த நாடு அங்கீகரித்துள்ளதாக ஆப்கானின் தலிபான்கள் ஆட்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நாட்டின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அவா்களால் நியமிக்கப்பட்ட தூதருக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்கியுள்ள இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்ததற்காக 2001-ஆம் ஆண்டு ஆப்கன் மீது படையெடுத்த அமெரிக்கா தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னா் அமெரிக்க படையினா் 2021-இல் வெளியேறிய உடனேயே தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினா்.
இருந்தாலும், மனித உரிமை மீறல், மகளிா் உரிமை மறுப்பு போன்ற காரணங்களால் தலிபான் அரசை அங்கீகரிக்க உலக நாடுகள் தயங்கி வருகின்றன. இந்தச் சூழலில், தலிபான்களை மறைமுகமாக அங்கீகரிக்கும் வகையில் அவா்களால் நியமிக்கப்பட்ட தூதரை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுள்ளது.