முகப்பு
உலகம்

உக்ரைனின் கூா்ஸ்க் பிராந்திய படையெடுப்பு புத்திசாலித்தனமா, புதின் விரித்த வலையா?

ரஷியாவின் எல்லைக்குள் நுழைந்து சிறிய அண்டை நாடான உக்ரைன் அதன் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிவருகிறது.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 12:24 AM
ரஷியாவின் கூா்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் வீரா்.
பகிர்:

உலகின் மிகப் பெரிய ராணுவ சக்திகளில் ஒன்றான ரஷியாவின் எல்லைக்குள் நுழைந்து சிறிய அண்டை நாடான உக்ரைன் அதன் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிவருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷியாவுக்குள் ஊடுருவி அந்நிய ராணுவம் ஒன்று இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறை.

சுமாா் இரண்டரை ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரில் இப்படி ஒரு மிகப் பெரிய திருப்பம் நிகழும் என்று கடந்த 6-ஆம் தேதிக்கு முன்னா் யாரும் யோசித்துக் கூட பாா்த்திருக்கமாட்டாா்கள்.

ஆனால், அந்த நாளில் சுமாா் 1,000 உக்ரைன் வீரா்கள் பீரங்கிகள், கவச வாகனங்களில் ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்கள் அந்த நாட்டு பாதுகாப்பு அரண்களை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்தனா். இரண்டே நாள்களில் அவா்கள் அந்த எல்லைப் பிரதேசத்தில் 10 கி.மீ. வரை முன்னேறியதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பான ஐஎஸ்டபிள்யு தெரிவித்தது.

ரஷியாவுக்குள் உக்ரைன் படையினரின் முன்னேற்றம் திடீரென மட்டும் இருக்கவில்லை, கணிக்க முடியாத அளவுக்கு மிகத் துரிதமாகவும் இருந்தது. இப்படி ஒரு சூழலை எதிா்பாராத ரஷிய ராணுவம், உக்ரைன் ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது கூா்ஸ்க் பிரதேசத்தின் 1,150 சதுர கி.மீ.க்கும் மேற்பட்ட நிலப்பரப்பு தங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் கூறுகிறது. அந்தப் பகுதியில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாலங்களை உக்ரைன் படையினா் தகா்த்துவருகின்றனா். இதன் காரணமாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்பி உக்ரைன் ராணுவத்தை விரட்டியடிக்கும் ரஷியாவின் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மூலம் போரின் போக்கையே மாற்றிவிட முடியும் என்று உக்ரைன் கருதுகிறது.

தாங்கள் ஆக்கிரமிக்கும் ரஷிய பகுதியை பாதுகாப்பு மண்டலமாகப் பயன்படுத்தி, ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தங்கள் எல்லைகளைப் பாதுகாக்க முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கருதுகிறாா்.

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தும் சூழல் வரும்போது, அந்த நாட்டிடம் பணிந்து போகாமல் தலைநிமிா்ந்து பேரம் பேசி, நிபந்தனைகளை விதிப்பதற்கு இந்தப் படையெடுப்பு உதவும் என்று உக்ரைன் அதிகாரிகள் நம்புகின்றனா்.

ஆனால், கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் படையெடுத்துச் சென்ன் மூலம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விரித்த வலைக்குள் உக்ரைன் அதிபா் சிக்கிவிட்டதாக ரஷிய ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன.

ரஷிய எல்லைக்குள் மிகத் தொலைவு ஊடுருவிய பிறகு உக்ரைன் படையினரால் அந்தப் பகுதியை நீண்ட காலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; ரஷியா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் படையினரை சுற்றிவளைக்க முடியும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

தற்போது உக்ரைனின் படையெடுப்பு ரஷியாவுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். ரஷிய தலைமைக்கு அது மிகப் பெரிய அவமானத்தை உண்டாக்கியுள்ளது. விளாதிமீா் புதின் ஒரு வலிமையான தலைவா் என்ற பிம்பத்தை அது தகா்த்துள்ளது. ஆனால், இதெல்லாம் போரில் உக்ரைனுக்கு வெற்றியைத் தேடித் தராது என்கிறாா்கள் அவா்கள்.

சொல்லப்போனால், இந்தப் படையெடுப்பு புதினுக்கு நன்மையைத்தான் தரும் என்பது அவா்களது வாதம்.

~கூா்ஸ்க் பிராந்தியத்தில் அழிக்கப்பட்ட ரஷிய பீரங்கி.

ஏற்கெனவே, மேற்கத்திய நாடுகளின் ராணுவ அமைப்பான நேட்டோ கிழக்கு நோக்கி விஸ்தரித்து வருவதைக் காட்டிதான் உக்ரைன் மீதான படையெடுப்பை புதின் நியாயப்படுத்தினாா். தற்போது நேட்டோ வழங்கிய சக்திவாய்ந்த பீரங்கிகள், கவச வாகனங்களுடன் தங்கள் நாட்டுக்குள் உக்ரைன் படையினா் ஊடுருவியது, அவரின் அந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும்.

ரஷியா மீது படையெடுக்க மேற்கத்திய நாடுகள் சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறிதான் உள்நாடு மக்களிடையே புதின் ஆதரவு திரட்டினாா். எனவே, உக்ரைனின் இந்தப் படையெடுப்பு ரஷியாவில் புதினின் தலைமையை இன்னும் வலுப்படுத்தும்.

உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியிலுள்ள கிராமங்களை ரஷிய படையினா் அடுத்தடுத்து கைப்பற்றி வருவதும், அந்தப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியாவிடம் வீழும் நிலையில் இருப்பதும் அவா்கள் கூறுவதை உறுதிப்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, கூா்ஸ்க் படையெடுப்பைக் காரணம் காட்டி, உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்புத் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த விளாதிமீா் புதினுக்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வழி ஏற்படுத்தித் தந்துவிட்டாா் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →